"மாற்றம்"
"மாற்றம்"
வாசலில் சையிக்கிளின் பெல் சத்தம் கேட்கவே, அடுப்படியிலயிருந்த பாமதி வீட்டின் முன் வாசலுக்குச் ஓடிச் சென்றாள். கையில் வைத்திருந்த மீன் வாங்கிவந்த பையைக் கொடுத்துவிட்டு.....'என்ன வதனா வீட்டிலதானே?' என்று தன் மனைவி பாமதியைப்பார்த்து வசந்த் கேட்டுக்கொண்டான்...
'இல்ல' ஒற்றைச் சொல்லில் பயத்துடன் சொல்லிமுடித்தாள்..பாமதி.
வசந்தின் முகம் மாற்றமடைந்ததை பாமதி கவனிக்கத்தவறவில்லை. தினமும் இதுவே வீட்டில் பெரிய பிரச்சனையாகிவிட்டது. நியாயமில்லாத கோபம். ஏன்தான் இவர் இப்படியோ என தனக்குள் முணுமுணுத்துக்கொண்டாள்..
'வரட்டும் கழுதை இண்டைக்கு இரண்டில ஒன்று பாத்துவிடுறன். எத்தன தரம் நானும் சொல்லிப்போட்டன் கேட்டாதானே சனியன் எனக்கென்று வந்திருக்கு சனியன் சனியன்'
தன் ஆத்திரம் தீர வாசலிலயிருந்து கத்தினான். சயிக்கிளை வேகமாக மிதித்துக்கொண்டு கூலி வேலைக்குச் சென்றான் வசந்த்.
நேரம் மாலை 5 மணியாகியது. வதனா வாசலில் காலணியைக் கழற்றிவைத்துவிட்டு அப்படியே கால் கழுவ பின்புறமாகச் சென்றாள். வதனாவின் வரவை எதிர்பார்த்துக்கொண்டேயிருந்த வசந்த் கத்தினான். 'நில்லு வதனா...இனி நீ இங்க இருக்கிறது நல்லதல்ல..உனக்கு எத்தன தரம் சொல்லிப்போட்டன். வேலைக்குப் போகாத போகாத என்று ஆனா நீ என்ர சொல்லை கேட்கிறதாயில்ல. ஊரில உள்ள சனங்கள் என்னைப்பற்றி என்ன நினைக்கினம் தெரியுமா?'
'அண்ணா இங்க வாங்க......யாரைப்பற்றியும் எனக்கு கவலயில்ல. என் புருசன் இருக்கிற நேரத்திலேயே நான் வேலைக்கு போய் வந்தனான். அப்ப எல்லாம் நான் போறது பிடிச்சிருந்தது இப்ப ஆட்கள் என்னமோ கதைக்கிறாங்க என்று பிடிக்கவில்லையோ?'
பதிலுக்குப் பதிலுரைக்க, வசந்த் சும்மாயிருக்கவில்லை..
'என்ன நீ கதைக்கு கதை கதைக்கிறாய். ஒரேயொரு தங்கச்சிக்கு சோறு குடுக்காம வேலைக்கு அனுப்புறான், என்று என்னத்தானே குத்தம் சொல்லுறாங்க...உன் அண்ணாவை இப்படிக்கதைக்கிறது உனக்கு சந்தோசமாகவா இருக்கு.சொல்லு'?.
'எனக்கு யாருடைய உதவியும் தேவையில்ல..நானே சம்பாதிச்சு வாழவேணும். உன்னால முடிஞ்சா இருக்க ஒரு துண்டு இடம் தா போதும் தரையில படுத்துக்கிறேன். மற்றப்படி சும்மா வீணா கத்தாத' சொல்லி முடித்தபடி உடை மாற்ற தன் அறைக்குள் சென்றாள் வதனா..
'என்ன கொழுப்பிருந்தா இந்த நாய் இப்படிச் சொல்லும்.இப்பவே போடீ வெளியில இப்பவே வெளியில போ நீ...அடங்காத பிடாரிகள நான் வச்சு சுமக்கேலாது. உன்ன பார்த்து என்ர பிள்ளைகளும் கெட்டுப்போயிடுங்கள்...நான் கூலி வேல செய்தாலும் என்ர குடும்பத்தை காப்பாற்றுவேன்..நீ போய் எப்படியாவது எக்கேடு கெட்டுப்போ'. அனல் கோபம் கண்ணில் தெரிய கத்தி முடிச்சான் வசந்த்.எதையும் காதில வாங்கிக் கொள்ளாமல் வதனா.
பாமதி எதுவும் பேசாமல் அடுப்படியில் தன் வேலைகளை கவனித்துக்கொண்டு இருந்தாள். இதெல்லாம் அவளுக்கு புதுசு இல்லை. தினம் தினம் இந்த வீட்டில அண்ணனுக்கும், தங்கைக்கும் நடக்கிற சண்டைதான் இது. அதனால அவள் எதுவும் பேசாமல் தன் வேலைகளை கவனித்துக்கொண்டாள்.
ஒவ்வொரு நாளும் அண்ணன் சொல்லுற வார்த்தைதான், கேட்டுக் கேட்டு புளித்துப்போனவளாக வதனாவும் தண்ணியை குடிச்சிட்டுப் படுத்துறங்கினாள்..
வழமைபோலவே காலை அண்ணன் வசந்த் சயிக்கிள் எடுத்து வெளியே போன சத்தம் கேட்டதும் வதனாவும், தன் அண்ணிக்குச் சொல்லிவிட்டு வேலைக்குப் புறப்பட்டாள்.
'வதனா நீங்க வேலைக்கு போகத்தான் வேண்டுமா..? உங்க அண்ணன் உங்களால ஒருநாளும் வீட்டில நின்மதியாயில்ல...அவருக்கா என்றாலும் வேலைக்கு போகாம விடுங்களேன்'
'அண்ணி நீங்களா சொல்லுறீங்க...இருந்து பாருங்க அண்ணனே சொல்லுவார் பாமதி நீயூம் வேலைக்குப் போ என்று. இப்ப அவருக்கு பாசம் மட்டும்தான் தெரியுது. அதனால என்னை சத்தம் போட்டு பேசுவார்' .......இருவரும் கதைச்சுக்கொண்டு இருக்கும் போதே
வாசலில் ஒரு வர் ஓடி வருகிறார்...'பதற்றப்படாதீங்க...வசந்த் வேலையில மேலயிருந்து கீழ விழுந்ததில ஒரு கால் முறிஞ்சு போயிட்டு.ஆசுப்பத்திரியல சேர்த்திருக்கம். இனி அவரால நடக்கஏலாதாம். கால் மூட்டு பொறுந்தாம விட்டா கால கழற்றவேண்டுமாம்' ராவுத்தர் ஐயா உங்கள பார்த்து சொல்லிட்டு கையோட கூட்டி வரச்சொன்னார்' என்று வந்தவர் சொல்லி முடிக்கமுதல் கேட்டுக்கொண்டு இருந்த பாமதி மயங்கிவிழுந்தாள்.
சில மாதங்களுக்குப் பின்..
'என்னம்மா வதனா, வேலையில சரியான பிஸியாம்மா..? உங்க அண்ணி சமைச்சு வச்சிட்டு இப்பதான் பக்கத்து வீட்டில கூப்பிட்டாங்க வேலைக்கு போயிருக்காங்க'. வசந்தின் தன்மையான தொணியில் சொல்லிமுடிக்கமுன்..
'உங்களுக்கு எத்தன தரம் சொன்னாலும் தலைக்குள்ள ஏறாதா..? நான் உழைக்கிறது இன்னும் 4 பேர் வந்தாக்கூட உட்காந்து சாப்பிடலாம். எதுக்கு அண்ணி வேலைக்கு போவான்?. அக்கம் பக்கத்தில பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க.அண்ணனுக்கு காலில்லை, அண்ணியை வேலைக்கு அனுப்பிட்டு இந்த பாமதி அதுகள கவனிக்கிறதில்ல என்றுதானே சொல்லுவாங்க'
'இதுவேற இந்த நேரம்பார்த்து கரண்ட் போயிட்டுது'....அலுத்துக்கொண்டு போத்தல் லாம்பை யன்னல் ஓரம் தடவிக்கொண்டு இருந்தால்..பாமதி.
போனது கரண்ட் மட்டும்தான்.ஆனால் வசந்திற்கு மனமெல்லாம் வெளிச்சமாகியது.
ஆக்கம்: "தனிமதி"