முதுமை சுவர்கள்
விழிகளுக்கு இனி
வெளித்தேடல் இல்லை...!
நான்கு சுவற்றுக்குள்
ஒடுங்கி விட்டது
என் வாழ்க்கை நாள்காட்டி ..!
விழிகளும்
சலித்துப்போயிற்று
வாழ்க்கையோடு ....!
மனசு மட்டும்
சிறகடித்துப்பறந்து
விழிகளை மேய விடுகையில்
புதியன ஏதுமில்லை பூமியில் ...!
திருவிழாவுக்கு
நேர்ந்துவிட்ட ஆடாய்
எத்தனை நாட்களுக்கு
மேய்ந்ததையே அசைபோடுவது ...?
வறியவனும்
வசதியானவனும்
அம்மணமாய்
ஒரே வழியில்
பயணிக்கிறான் மயானத்துக்கு ...!
யார் யாரை
சுரண்டப்போகிறார்களோ...?
பக்கத்து
பாடையில் ஏற்கனவே
படுத்திருக்கிறான்
கடன் கொடுத்தவன் ..?
நான்கு சுவற்று
நிம்மதி
அங்கு போய் தொலைந்து போகுமோ ..?
விழிகளை மூடுமுன்
விடை தேட வேண்டும் ...!