கடவுள் கல்லாய் சிரித்தான்
செந்தூர் முருகனைக் காண என்று
சிறப்பு தரிசன முறை பல இருக்கு
அழகன் முன்னே அமர்ந்த தரிசனம்
நெடு வேலோனை நின்று தரிசனம் !
இலவச தரிசன வரிசையில் நான்
இறைவனைக் காண நின்றிருந்தேன்
ஆமையாய் நகர்ந்த வரிசை
எங்கும் அரகரோ விளிகள்
அலை பாய்ந்தன கண்கள்
கண்டன கடவுளை அங்கே!
கரைந்தொழுகிய கண்ணீரில்
கந்தன் இருந்தான் .!
கூப்பிய கரங்களில்
குமரன் இருந்தான் –நாமம்
உச்சரித்த உதடுகளில்
வேலன் இருந்தான் - வரம்
வேண்டிய மனமெல்லாம்
மால் மருகனே நிறைந்தான்!
அரகரோ விளிகளால்
காற்றில் கலந்தான் –உயிர்
மூச்செலாம் நிறைந்தான் !
பார்க்கும் இடமெல்லாம்
பரமனே நிறைந்தான் !
என்னிலை மறநது ஆனந்தமானேன்
தன்னிலை மறந்தேன் தரிசனம் பெற்றேன் !
வரிசை நகர்ந்தது முறையும் வந்தது
எட்டிப் பார்த்தேன் கடவுள் கல்லாய் சிரித்தான் !!!