அடையாளம்

ஒருவன்
தான் சேர நினைத்த இடத்தின்
முகவரியை தொலைத்துவிட்டவனாய்
நின்று கொண்டிருந்தான்

அவன்
விடியலை கொண்டு வரும் ஆண்டுகள் இருப்பதை
மறந்துவிட்டு
இருளில் பிறக்கும் புத்தாண்டை கொண்டாடிவந்தான்

தன் திருமண விழாவிற்காக
தாத்தாவிற்கு வேட்டி எடுத்து கொடுத்த அவன்
வேட்டி கட்ட தெரியாதவனாய் இருந்தான்

தீபாவளியை விமர்சையாக
கொண்டாடிய அவனுக்கு
பொங்கல் அன்று
வாழ்த்துக்களை பரிமாரிக்கொள்ளக் கூட
நேரம் இல்லாமல் போனது

காலத்தை வகுத்து
கிழமைகளாகவும்
மாதங்களாகவும்
தந்தவனின் வழி வந்த அவன்
நவீன காலத்தில்
கட்டங்களை நம்பாதீர்கள்
என்று பிரச்சாரம் செய்து வந்தான்

அவனைப் பற்றி
அவன் பாட்டன் சொன்னதை
நம்பாத அவன்
அதையே வெளியிலிருந்து
வந்த ஒருவன் சொன்ன போது
அதனை பெருமிதத்தோடு
இணையத்தில் பகிர்வு செய்தான்

எழுதுவதற்கு
அடுத்தவனை நம்பிக்கொண்டிருக்கும் அவன்
பேசுவதற்கும் பாதி
அடுத்தவனையே நம்பியிருந்தான்

அடுத்த வீட்டுக்காரன்
தந்த பாடலை
தன் குழந்தையை பாடச் செய்து
ரசித்து வந்த அவன்
தன் குழந்தையிடம்
உயிரும்
மெய்யும்
இல்லாததை கண்டு
வருத்தம் கொள்ளாதவனாய் இருந்தான்

அவன்
தான் யார் என்பதை
மறந்து போனதன் காரணமாய்
அடுத்தவனின் பெருமையை
கண்டு வியப்புற்றான்

அவன்
வீரன் என்பதை படித்திருக்கிறேன்
அவன் நாகரிகமானவன்
என்பதை பார்த்தும் இருக்கிறேன்
அவன்
நடிகன் ஆன கதையை
பார்த்துக் கொண்டிருக்கிறேன்

அவனைப் பற்றி விசாரித்ததில்
அவனின் பெயரை
என்னால் உச்சரிக்க முடியவில்லை
அவன் பாட்டியின் பெயரை
அவனால் சரியாக உச்சரிக்க முடியவில்லை

அவனிடம்
“உன் அடையாளத்தை தொலைத்து விடாதே”
என்று சொல்ல நினைத்தேன்
முன்னமே அவன்
என்னை தொலைத்து விட்டுதை மறந்து.

எழுதியவர் : சுதாகர் கதிரேசன் (23-Sep-13, 4:10 pm)
சேர்த்தது : சுதாகர் கதிரேசன்
Tanglish : adaiyaalam
பார்வை : 76

மேலே