நான் முட்டாளின் முதல் வாரிசு...!!
பாதி உறக்கம் கண் கவ்வும் பொழுதினிலே
கைகள் தீட்டும் கனவு ஓவியம்...
எத்தனையோ யுகம் தாண்டி
யூதர்களின் களம் தாண்டி
எனதென்றும் உனதென்றும் இல்லாத
குரங்கினங்களை காண்கிறேன்...
கொஞ்சம் அதுவாய் கொஞ்சம் இதுவாய்
மரமெல்லாம் காற்றாய்
குறுக்கும் நெடுக்கும் குதித்து தாவி
குலவிடும் குளமொன்று...!!
இதோ ஒரு பக்கம் இறைவன் ஒருவன்
ஆதம் ஏவாள் அறங்கள் சொல்லி
அங்கே ஒரு காடுதனில்
அளவளாவ விடுகிறான்...!!
சாத்தானெனும் நாகமது
உணர்வுகளை உந்திவிடும் கனியொன்றை நீட்டும்
உண்டிட மறுத்திட்ட அக்கனியை
ஆங்கவர் முன் வைத்ததென்ன??
புரியாமல் விழிக்கையில் இன்னொரு பக்கம்
இச்சகத்தில் இச்சைகளின் மிச்சமாக
இங்கும் அங்கும் இறைந்துகிடக்கும்
இறையின் மீதமாய் மானுடம்...!!
மூன்றுலகம் முன்னிருக்க
மறந்து நின்றேன்
என் உலகம் எதுவென...
கேட்பதற்கு ஆள் தேடி அலைந்திருந்தேன்
அந்தவழி அழகிய மான்குட்டி ஒன்று
அதுவழியே மதிமயங்கி செல்லமுனைந்தேன்
அச்சமென்று ஏதுமில்லை அங்கே
ஆசை வரம் அள்ளி தரும் அன்பு தேவதை
அழைத்தால் என்னை..
மயில்தோகை ஆடையில் அவள்
மலரா..? மகிழ்ச்சியின் வெளிச்சமா..??
மனக்கண்கள் கூசிடசெய்யும்
மங்கையவள் கண்கள் மின்ன...
தங்கக்கரம் தாழ்த்திட்டால்
தயங்கி தயங்கி தொட்டுவிட்டேன்
தீண்டிய இன்பம் முழுதாய்
தொடும் முன்பே...
தொடுதலை உணர்ந்து திடுக்கிட்டு திகைத்தேன்
சுற்றிலும் அமைதி..
சூரிய வெளிச்சம்...
அத்தனை பேர் கண்களும் என்மேலே...
அதிலும் ஒருவர் அதிக கோபமாய்
ஆங்கிலத்தில் 'கெட் அவுட்' என்றார்
அரங்கம் அதிர...!!
அவரை கடக்கையில்தான்
அறிந்துகொண்டேன்
உறங்கியது தேர்வறையில்....
தொனதொனத்த
வழுக்கைத்தலை ஆசிரியர்
தொல்லையின் திருவுருவாய்
என் முன்னே....!!