முகவரி தந்த முதிசங்கள்.(ரோஷான் ஏ.ஜிப்ரி)
தாத்தா பாட்டி கதைகளை
கேட்க மறுத்த காதுகள்
மரபையும்,உறவையும் மறந்தபடி...
வருந்தத் தக்க வலிகளாகவே
நம்மிடையில்....வலம் வருகின்றன.
போற்ற வேண்டியவர்களை
தூற்றி கொண்டவர்களாய்
மோகத்தில் முழுவதும் மூழ்கி
நாகரீகத்தின் நலிவுகளாய்...
மன்னிக்க முடியாத அளவு இளசுகள்
எண்ணிக்கையில் அதிகரித்து விட்டன...
அநியாயத்துக்குரிய அம்சமாய்
வரலாற்றை படிக்க வேண்டிய வம்சம்
நினைக்கும் போது
நெஞ்சுப் பொறி முட்டி
கண்கள் வழி பீறி வலி கசிகின்றன.............
கற்கண்டு சுவைகொண்ட
சொற்கொண்டு கதைசொல்லும்
பாசத்துக்குரிய பாத்திரங்கள்
பரம்பரை அரிய கோத்திரங்கள்
தாத்தா அல்லது பாட்டி
நாம் பூக்களாய் சிரிக்க கிளைகள் தந்த
அபிமானத்துக்குரிய ஆணிவேர்கள்
அவமதிக்க வேண்டாம் அனுமதியுங்கள்,
அலட்சியப் படுத்தாமல் ஆதரியுங்கள்
அவர்கள் போர் குற்றவாளிகள் அல்ல
நம்-வேர் நட்ட வாளிகள்
சமுகத்தில் நாம் தலை நிமிர
கூன்விழ குனிந்த கொள்கை வாதிகள்
குறும்பென மாறிய வெள்ளை ஜாதிகள்
இன்றைய அவர்கள் நாளைய நீங்கள்
தவறி விழத் தக்கதான
மூப்பின் விளிம்பில் பயணிக்கும்
முதிசங்கள்-நமக்கு முகவரி தந்த மூலதனங்கள்
வாழ்வையும்,வரலாற்றையும் போதித்த வள்ளல்கள்
அறிவையும் ஆற்றலையும் கற்பித்த
ஆச்சரியத்துக்குரிய ஆசான்கள்-இன்று
இளமைக்கு திரும்புகின்ற முதிய குழந்தைகள்
இமை மூடும் வரை அன்பால் விரும்புங்கள்.
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.
---------------------------------------------------------------------------
இலங்கை தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பினால்
சர்வதேச மட்டத்தில் 01-10-2013 நடாத்திய கவிதைப் போட்டியில் தொகுதிக்காக தெரிவு செய்யப்பட்ட கவிதை
தடாகம் குடும்பத்தினரின் நல் வாழ்த்துக்கள் ...
------------------------------------------------------------------------