அகரமுதல்வனின் வணக்கம்
அனைத்து தோழர்களுக்கும் உங்கள் தோழன் அகரமுதல்வனின் வணக்கம் .
கலைப்படைப்புகள் என்பது வெறும் கலையாக மட்டுமின்றி எனது இனத்தின் விடுதலைக்கான விலை கொடுப்பையும் அதன் வலியையும் துரோகங்களையும் இலக்கியமாக பதியவே எழுத்து ஊழியத்தில் என்னை இணைத்துக் கொண்டு செயற்பட்டு வருகிறேன் .
ஒரு மேம்பட்ட முற்போக்கான சமுதாயமாக எங்களது தலைமுறை உருவாக வேண்டும் என்கிற ஒரே நோக்கோடு எனது படைப்புகள் உருவாக்குவது எனக்கான கடமை என்றே எனக்கு தெரிகிறது .
ஒரு மிகப் பெரும் காட்டுமிராண்டித்தனமான படுகொலையை தென் ஆசியாவின் ஒரு குட்டித் தீவில் சர்வதேச ஏகாதிபத்திய சக்திகள்
தமிழ் தேசத்தின் மீதும் தமிழர்களான எங்கள் மீதும்
நடத்தி எங்கள் முற்றங்களையே எமக்கான சுடுகாடாக்கி இந்த நூற்றாண்டு எங்கள் ரத்தக் கறைகளை அதன் மீது பூசியுள்ளது .
இந்த துயரையும் அடக்குமுறையையும் பதியாமல் எழுதாமல் வாழ்ந்து மடிந்து போவதில் எனக்கு உடன்பாடில்லை .ஒரு படைப்பாளன் எந்த அடக்குமுறைக்கும் அடி பணியாமல் துப்பாக்கிகளின் சன்னங்களை கண்டு அஞ்சாமல் எழுதுவது தான் அவனுக்கான வீரியம் ,அவனுக்கான நேர்மை .
தொடர்ந்து என் மக்களுக்காகவும் எனது இனத்தின் விடுதலைக்காகவும் எந்த ஒரு படைப்பாளன் தீவிரமாக கலை இலக்கியங்களை படைக்கிறானோ அவனை எவனாலும் புறக்கணிக்க முடியாது .
விருதுகளுக்கோ,புகழுக்கோ தாளமிடும் கவிதைகளை நான் எப்பொழுதும் எழுதியதில்லை எழுதப்போவதுமில்லை .
சரியான விருதுகள் என்பது ஒரு கலைஞனை அச்சுறுத்தும் ஆரோக்கியமான ஊக்கமருந்து என்பதனை உணர்ந்த எனக்கு "அத்தருணத்தில் பகை வீழ்த்தி"எனும் கவிதை தொகுப்பிற்கு தமிழ்நாட்டில் 2 இரண்டு விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளது என்பதனை மகிழ்வோடும் பணிவோடும் அறியத்தருகிறேன் .
அத்தோடு எனது கவிதைகள் சென்னை கிறித்துவக் கல்லூரியில் ஈழம் பற்றிய பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது என்பதும் கூடுதல் செய்தி .இதற்கு தோழர்களான அகன் மற்றும் பொள்ளாச்சி அபி ஆகியோருக்கு என்னுடைய உரிமைகள் நிறைந்த வணக்கங்கள் .
எனது கோவணங்கள்
படை முகாமில் தொங்கவிடப்பட்டிருக்கின்றன
நான் அம்மணமாகவே
போரிடுகிறேன்
எனக்குத் தெரிந்த
கவிதையெனும்
பயங்கர
ஆயுத உதவியோடு
பிரளயம் மிரளும் .
நன்றிகள்
தோழன் .அகரமுதல்வன்