பக்கத்துக்கு வீட்டு பெருசு ...!

போன வாரம் வரை
ஊன்று கோலோடு
உலவிய கால்கள்
ஓய்வெடுத்தன ஞாபகக்கட்டிலில் ...!

மெல்லப்பேசி
உறவுகள் வட்டமடித்தன
கட்டிலை சுற்றி சுற்றி ...!

பதிவாளர்
உயில்
எழுத வருகையில்
" ஆம் " என கூறுமோ இந்த கிழம்...?

கவலையின்றி
இடது பெருவிரலை
வருடும் வாரிசுகள் ...!

வீட்டின்
ஈசானி மூலையில்
பெருசு வளர்த்த மரம்
நேற்று மாலையே
முந்திக்கொண்டு விட்டது ..!

வெட்டி
வீழ்த்தப்பட்டதும்
யார் வீட்டுக்கோ
விறகாக பயணப்பட்டு விட்டது ...!

நாளை
யாருக்கும் பயனற்று
எரிய
பயணப்பட்டு விடுமோ இந்த கிழம் ....?

முகம் தெரியா
முகமூடிகள்
என்
பெருவிரல் ரேகையை
திருடிக்கொண்டு செல்கின்றனர் ... ...!

இடது பெருவிரல்
கருப்பு மையை
துடைக்க
இடம் தேடி அலைகிறது விரல்கள் ...!

வாழ்க்கையை
சுத்தமாக
துடைத்து விட்ட பின்
இனி
துடைப்பதற்கு என்ன இருக்கிறது ...?

விழிகளை மூடிக்கொண்டு
பாசத்தை
எங்கே தேடுவது பார்வைக்குள் ...?

நேற்று மரம்
இன்று
வீழ்ந்தது பெருசு ...!

ஒற்றை ரூபாய்
நாணயத்தை
உறவுகள்
நெற்றியில் வைக்க
ஐம் புலன்களையும்
அதில் செலுத்தி
அண்ணாந்து பயணப்பட்டது பெருசு ..!

செல்போன்கள்
சில
சிணுக்கின ...!

நாளை
கெடாய் விருந்துக்கு
யார் சமையல் நன்றாக இருக்கும் ..?

பாலூட்டிய சங்கை
யாரோ
தலையில் வைத்து
மிதித்து
உடைக்க சொல்ல ...!

புகையான
பின்னும் சிரித்தது பெருசு ...!

****************************************************************************

எழுதியவர் : வெற்றி நாயகன் (28-Sep-13, 8:17 am)
பார்வை : 93

மேலே