சிறுபிள்ளை
வானத்தை காதலித்து
வயதாகி போன சிறுபிள்ளை..
ஓலை சாளர பனைமர குயில் ,
தலை அசைந்தாடும் சோளக்காடு
இலைகளை அட்சதை போடும் அரசமரம்,
ஈசானி மூலையின் வயற்காடு
தத்து எடுத்த சிறுபிள்ளை ..
உச்சி வெயிலில் கலை எடுத்து
உழவு புழுதியின் வேர்களுக்கு ,
உரமாகி போன சிறுபிள்ளை ...
ஓடையின் கைகளில்
ஓணான் கொடிகளாக பூத்துக்கிடக்கும் சிறுபிள்ளை ...
மேகங்கள் தங்கி செல்லும் மரமல்லிகாட்டில் ,
தாகம் தீராத சில்லுண்டுகளின் ரீங்காரத்தின் ,
தாலாடோடு தூங்கும் சிறுபிள்ளை ...
வானத்தை காதலித்து காதலித்தே ,
வயதாகி போன சிறுபிள்ளை ..
ஈச்சமர அணில்பிள்ளையோடு,
நிசப்தத்தை முழுங்கி கொண்ட ஆட்டுகொட்டகையில்,
வயதை தொலைத்த சிறுபிள்ளை ...
கைகளில் தூக்கி கொண்டு ,
காலம் முழுதும் கொஞ்சிட முடியாத சிறுபிள்ளைக்கு ,
கண் முன்னே நடக்கிறது ,
கருணை கொலை ...
புதிய தகவல் எதுவும் இல்லை - இவனை ,
புரியாதவர்கள் என்று யாருமில்லை ,
தடுத்து நிறுத்த ஆவலர்கள் இருந்தும் ,
கண் முன்னே நடக்கிறது - இவன்மீது ,
கருணை கொலை ...
அசைந்தாடும் நுனியில் இருந்து ,
அடி வேர்களை சாய்த்து கொண்டிருக்கிறோம் ,
அறிவியலின் கையில் அமிலத்தை கொடுத்து ..
இறந்து கொண்டிருக்கும் சிறுபிள்ளையின் ,
இறுதிகட்ட உயில் இது தான் ..
"வரலாறு என்று இருக்கும்போது ,
வருங்காலத்தில் கேள்வி தாள்களில் மட்டுமாவது ,
வரிகளாக மிதக்க விடுங்கள் ,
கிராமம் என்ற பெயரில் "...