சரணடைதலின் விளைவு

துயரார்ந்து கோடை காலத்தில்
நடுங்கிய படி
நான் சரணடைதலை நிகழ்த்த
பீறிட்டு வெளியே வரும் வன்மங்களோடு
எனக்கான விசாரணை
தொடங்குகிறது
மேகம் காலடியில் வந்து கண்ணீர் சிந்த
தீ மூண்ட விசாரணைக் கொட்டகையில்
எனது தோழனை பலியெடுக்கிறார்கள்
அடுத்து மஞ்சள் நிற சாறத்தோடும்
அதே நிற மென்சட்டையோடுமிருக்கும்
நானாகக் கூட இருக்கலாம்
எனது ஜீவிதம் நிறைவாக்கப்படும்
வீர மரணத்தை எதிர்பார்த்து
இன்னும் என்னென்ன நடக்குமென்று
ஒரு பட்டியலை மனதிற்குள்
போடுகிறேன்
குருடன் காற்றைப் பார்ப்பது போல
எனது வெளுத்த விழிகளில்
நான்காம் மாடிப் பார்வையால்
மிரட்டுகிறவன்
தகட்டிலக்கம் தவிர்த்து
என் ரகசியப் பெயரை அறிந்திருப்பதை
நன்றாக உணர்ந்தேன்
பெருத்த மழையில் நனைந்த கூடற்ற
கோழியாய்
மூச்சு நடுங்குகின்ற எனது அம்மாவையும்
அக்காவையும்
தாசியெனத் திட்டி ஆபாசமாகப் பார்க்க
மேலும் ஒளியற்று பகல் மண்டியிட்டது
நாயகன் களத்திடை வீழ்ந்தது உறுதியானது
விடத்தல் பத்தையில் வீசியெறிந்த
ஏ.கே 47 ன் வீரியம் பற்றி
ஆடையொன்றுமில்லாமல் எழுதிக்
கொண்டிருக்கிறேன்
நான் இழக்கும் குருதிகளால் வலுப்பெற
அக்காவின் குழந்தைகளுக்கு கவிதை .

தீராநதி
அக்டோபர்

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (5-Oct-13, 2:26 pm)
பார்வை : 93

மேலே