தீ நடுவில் சொர்க்கம்

தொலைதூர விண்மீனாய் இருந்தென்ன லாபம்-உன்
சுவாசம்தான் எனை வருடும் சுகமான மேகம்
அலை மோதும் கரைக்கென்ன அனுதினமும் யோகம் - எனை
அடிப்பாயோ அணைப்பாயோ அங்கம் தொடு போதும்

சொந்தமென நீயிருந்தால் தீ நடுவும் சொர்க்கம் - நான்
சொத்தாக நினைப்பதுந்தன் சிவப்பு நிற வெட்கம்
இதழ் விரித்து இறங்கி வரும் உன் சிரிப்பு மின்னல் - அது
இசைஞானி இயற்றி வைத்த ஏழு ஸ்வரப் பின்னல்

உறங்கினாலும் உன் நினைவே உயிராழம் தீண்டும்- காதல்
விளையாட்டை வித விதமாய் விளையாடத் தூண்டும்
கனவுகளை காத்து வைக்க கருவி ஒன்று வேண்டும் - என்
கனவுகளில் உன் வரவை கவிதை ஆக்க வேண்டும்

நானெனவும் நீ எனவும் இருந்த கதை முடிப்போம் - இசை
நாணெனவும் விரலெனவும் சுக ஸ்வரமாய் துடிப்போம்
நீர் விலக்கித் தீ அருந்தும் காதல் கலை படிப்போம் - ஒரு
நீள் இரவில் நிலை மறந்து போர்க்களமாய் வெடிப்போம்.

எழுதியவர் : ஏ.கே. பிரான்சிஸ் (11-Jan-11, 6:47 pm)
சேர்த்தது : Francis
பார்வை : 385

மேலே