நான்தான் கடவுள்

பங்சார் சிவப்பு
விளக்கில்
சில்லறைகளை
எண்ணியவன்
மதுரை வீரனாகிறான்....
லிம் மதுக்கடையின்
சுப்ரபாதம் அவன்...
குங்குமம் தருகிறான்...
கொட்டாவிக்கே
கெட்ட வார்த்தைகள்....
வாக்கு சொல்கிறான்....
சுமங்கலியை
முகர்பவன்
சங்கிலி கருப்பன்
என்கிறான்....
இருட்டில்
கச்சையை
கசக்கும்
கைகள்
வெளிச்சத்தில்
கைலாசம் காட்டுகிறது
தாயின் காலை
பிடித்து விடாத
கைகள்...
நெடுந்தூரம்
நடந்த
படி ஏறும்
கடவுளின் கால்களை
நீவுகிறது....
வெட்டுக் கத்தியும்
எச்சில் சுருட்டும்
நாய் பீரும்
பட்டைச் சாராயமும்
புனிதமாகி....
முட்டி மோதி
காட்டிய நெருப்பும்
பூசிய சாம்பலும்
மறையாகி...
மழுங்கி வரும்
மடப்பையல்கள்
"நான் கடவுளாகும்"
முட்டாள்கள்
விழாவிற்கு
திரு
என்ற
மரியாதை
ஒரு கேடு!
சமயத்தில்...
சமையாத உள்ளங்களில்...
அறிவை சல்லடையில்
தேடும் உச்சத்தில்
உறங்கும் சிறு மூளையின்
விழிப்பில்...
உதறும் கைகளும் கால்களும்
பிதுங்கும் விழிகளும்
தொங்கும் நாக்கும்
வழியும் எச்சிலும்...
புகைக்கும் உதடும்...
நாறும் வியர்வையும்
இறைவனானது எப்படி?