என் அன்புள்ள அஸ்திவாரமே...

கவிதைகளும் காவியங்களும் போற்றி பேசும்
உன்னதமாய் தாயின் அன்பு..
தாயிற்கு இணையாய் அன்பினை பொழியும் தந்தையர் மட்டும் மறைக்கப்படுகின்றனர் அஸ்திவாரங்களாய்....
என் அன்புள்ள அஸ்திவாரமே.... இதோ உனக்காய் ஒரு கவி மாலை...

அந்தி சாயும் மாலை நேரம், எங்கள் ஆரவாரம் ஊரை கூட்டும்..
அக்காவோடு மல்லு கட்டி, தலையணை கொண்டு தம்பி அடித்து
நாங்கள் செய்யும் சேட்டை சத்தமோ வீட்டின் கூரை பிளக்கும்...
இந்த ஆர்ப்பரிக்கும் சத்தம் நடுவே இன்னிசையாய் செவியில் நுழையும்
அன்பு தந்தையின் மிதியடி ஓசை...

இன்னிசையாய் நுழைந்த ஒலி, இடியோசையாய் இதயத்தில் இறங்கும்..
ஆங்காங்கே பரவிகிடந்த பொருட்கள் யாவும் அது அதுவாய்
தானாக தன் இடம் போய் சேரும்.. சிதறி கிடந்த புத்தகமோ!
சட்டென எங்கள் மடியினில் தவழும்... இருவரி திருக்குறளை
இரு நூறு முறை எங்கள் உதடுகள் முணுமுணுக்கும்....

இதோ சிங்கத்தின் கர்ஜனையை நகல் அடித்தாற் போன்று
சின்னதொரு செருமல் இட்டு..அடர்ந்த மீசை முறுக்கி...
அழகாய் வருகிறார் எங்கள் அன்பு தந்தை..
பேசும் வார்த்தை தனில் கண்டிப்பு கலந்திடினும்...
அவர் கண்களிலே பாசம் தழும்பும்...

அவர் தன் சட்டை பையில் கை விட்ட மறு நொடியே...
எங்கள் நாவினிலே நீர் சுரக்கும்...அழகாய் அனைவருக்கும்
சமமாய் பகிர்ந்தளிப்பார் நாடார் கடை கமர்கட்டு மிட்டாயை...
திருவிழாக்கள் எனும்போதே உள் நெஞ்சில் சாரல் அடிக்கும்...
கடலென கூட்டமிருந்தாலும் வாரணம் ஏறியமர்ந்த கோவினை போல்
என் தந்தை தோள் மீதமர்ந்து பவனி வருவேன்.. அழகிய அற்புதமாய் நெஞ்சில் நிறைந்த நாட்கள் அவை....

காலன் அவன் சதி வலையால் கடந்திட்டன வருடம் பல...
கல்லூரி முடித்து கணினி தட்டி யானும் ஆகினன் பொறியாளனாய்...
சொந்த விருப்புடனே நாடு கடத்த பட்டேன் எதிர்காலம் கருதி...
சுயமரியாதை பெற்றேன்.. என் சுயத்தை இழந்தேன்...
இதோ மாதம் ஒரு முறை எங்கள் வீட்டிற்கு செல்கின்றேன்...
மைந்தனாய் அல்ல ஒரு விருந்தினனாய்....

என் அன்புள்ள அஸ்திவாரமே... என் தந்தை நீ என்று சொல்லி ஊரெல்லாம் பெருமை கொள்கிறாய்... ஆனால் உன் மைந்தன்
யானென சொல்லி உந்தன் மடி சாயவே உள்ளம் ஏங்குதிங்கே.. கண்ணில் பட்ட பொருட்களெல்லாம் வாங்கும் திறன் வந்தாலும் உள் மனது இன்னமுமே
நீங்கள் தரும் கமர்கட்டுகாய் ஏங்கி நிற்கும்...


வருடங்கள் பல ஓடியதால் வளர்ந்திட்டது உடல் மட்டும்... உள்ளம் மட்டும் இன்னமுமே மருகுகிறது ஒரு மழலை போல்...
என் சுட்டு விரல் முன் நீட்டி காத்திருக்கிறேன் உனக்காக...
என் விரல் பற்றி தலை கோதி அழைத்து செல்வாயா மீண்டும்
கடந்து வந்த அந்த அழகிய உலகிற்கு :(

எழுதியவர் : பிரபு பாலசுப்ரமணி (18-Oct-13, 9:27 pm)
பார்வை : 643

மேலே