அறிவு நாடும் இறை
ஞானங்களின் ஆற்றங்கரையில்
நீ கரை
நான் நுரை
தேடலின் பறவையாய்
நாளும் நமக்குள்
சிறகசைப்பு
சப்பாத்திக்கள்ளிச் சாலையெங்கும்
அனுபவப் பாடங்களே
காலணி
வெளுத்துப்போன ஓவியமாய்
ஒரு நாள்
வண்ணம் பாய்ச்சும் வானவில்லாய்
ஒரு நாள்
எந்நாளும் வர்ணம் பார்க்காத வழித்தடத்தில்
அறிவும் இறையும்.
சிந்தனை நதிகளில்
படகாகும் போது
கடக்க வேண்டிய இலக்கு
இலகுவாகிறது.
குன்றுமேலெல்லாம்
பூக்காட்டின் வாசம்
குடிசை வீட்டுப் பைக் கூடுகளில்
அறிவு முட்டை அடைகாக்கப்படுகிறது
காக்கும் கடவுளை நினைந்து.
குருகுலக் கல்வியின் கண்துடைப்பு
காரியங்களின் கைங்கர்யம் எல்லாம்
காலாவதியாகி விட்டன
என்னவளுக்கு வருகின்ற
காய்ச்சலைப் போல்
விளங்கிக்க முடியாத நிலையில்
கல்வியும் கடவுளும்.
பொழுதினிக்கும் உழைத்தவர்
பொழுதினிக்கும் எப்போது?
சங்கடப் பரிவாரங்கள் சூழ்கின்ற
சனங்களின் விடியல் பூக்க உதவும் அறிவில்
கணகணவென ஜொலிக்கிறான்
கடவுள்.
எல்லாமும் நாமாகிற
அறிவுச் சபையில்
இறைவன் அரசாட்சி
அறிவும் இறையும் இருக்குமிடங்கள்
மலருக்குள் உறங்கும் தேன் நிலை
அமைதி...... அமைதி