ஒரு விண்ணப்பம்..!- பொள்ளாச்சி அபி

அய்யா..எங்கள் தெருவுக்கு
அரசுக் குடிநீர் வர்றதில்லை.
இரவில் விளக்கெரியறதில்லை..
சாக்கடைகளும் சுத்தமாயில்லை..!

கழிவுத் தண்ணீயிலே நிறைஞ்ச கொசு
டெங்கு,மலேரியான்னு
எல்லா காய்ச்சலையும்
எங்களுக்கு ஏத்துது..!

அரசு ஆசுபத்திரியில்
அலோபதி டாக்டரில்லை..,
என்ன காய்ச்சலுன்னாலும்
கொடுக்குறதுக்கு மருந்துமில்லை..!

குடிசை மாற்று வாரியத்தில்
வாங்குன வீட்டோட கூரை ஒழுகுது.
அடுக்குமாடி வீடுகள்ளாம் வேற
ஆடிகிட்டு கிடக்குது.!

எல்லா வளமும் இருக்குற நாட்டிலே
எதுவுமே இல்லாமப் போனமாதிரி
வசதியில்லாத வனாந்திரத்தில்
வாழுறோமான்னு மனசு நெனக்கிது..!

தேர்தலுக்கப்புறம்,வராத உங்களுக்கு
மறந்திருந்தால் என்ன செய்யுறதுன்னு..,
வழிகாட்டும் படமொன்னை
உங்க வசதிக்காக இணைச்சிருக்கேன்.!

கூடுதலான தகவலாக..
எங்க ஊருக்குள் நுழைஞ்சவுடனே
கையொடிஞ்சு போன
காந்தி சிலையும்..,

கறுத்துப்போன காமராசர் சிலையும்
இடிஞ்சுபோன பாரதி மண்டபமும்,
விழுகறமாதிரி சமூகக்கூடமும்
கண்ணுலே நிச்சயம் படும்..!

ஆடுமாடு அடைஞ்சிருக்கும் பள்ளிக்கூடமும்,
வாணம் செய்யுற பட்டாசுக் கம்பெனியும்
ஆத்துநீரை உறிஞ்சும் வாட்டர் கம்பெனியும்
அதுக்கடுத்தாப் போலத்தானிருக்கும்..!

எனவே அமைச்சர் அய்யா..!,
செவ்வாய் கிரகத்தில்
மனுசன் வாழமுடியுமான்னு பாக்கறதுக்கு
“மங்கல்யான் ராக்கெட்டு”
வுடப்போற விழாவுக்கு
போகுற வழியிலே..,
கொஞ்சம் முன்னதாக வந்து-
இந்தஊருலே மனுசன் வாழமுடியுமான்னு
கொஞ்சம் பாத்துட்டுப் போக கேட்டுக்கிறேன்..!

இப்படிக்கு
கண்ணீர்குடி தாலுக்கா
வறட்டுப் பள்ளம் அஞ்சல்
கீழத் தெரு
மாசான முத்து

எழுதியவர் : பொள்ளாச்சி அபி -B +ve (23-Oct-13, 6:11 pm)
பார்வை : 183

மேலே