தாய்ப்பாலின் அவசியம்
குறிப்பு : இந்தக் கட்டுரை வேறொரு இணையதளத்தில் படித்தது. பிறர் நலன் கருதி இங்கு இடப்படுகிறது.
தாய்ப்பாலின் அவசியம்..!
தாய்ப்பாலிலுள்ள ஹேம்லெட் என்ற பொருள், 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் பெற்றுள்ளது என, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி கண்டறிவதற்காக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது தான், ஹ்யூமன் ஆல்பா லாக்தல்பூமின் மேட் லெதல் டூ ட்யூமர்! இதன் சுருக்கம்தான், ஹேம்லெட்! மனித உடலில், ஹேம்லெட் என்ன பங்காற்றுகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
ஸ்வீடன் நாட்டின் லுண்ட் பல்கலை மற்றும் கோத்தென் பெர்க் பல்கலையின் ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், இந்த ஹேம்லெட் மனித உடலிலுள்ள 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின் போது, சிறுநீர்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு, ஹேம்லெட் கொடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சிறுநீருடன் புற்றுநோய் செல்கள் இறந்த நிலையில் வெளியேறியது கண்டறியப்பட்டது.
இதன் மூலம், புற்றுநோய்க்கான சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படக் கூடும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். ஹேம்லெட் புற்றுநோய் செல்களை மட்டுமே அழிக்கிறது; மற்ற செல்களை பாதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹேம்லெட் எப்படி புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது குறித்து, ஆய்வு நடந்து வருகிறது. குழந்தையின் வயிற்றில் செல்லும் தாய்ப்பாலில் உள்ள, ஹேம்லெட் அங்கு, அமிலத் தன்மையை உருவாக்குகிறது. அதன் மூலமே, கேன்சர் செல்கள் அழிக்கப்படுகின்றன என்று தெரிய வந்துள்ளது.
தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒவ்வாவை நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது. ஒவ்வாமையினால் வரும் ஆஸ்த்மா நோயைத் தடுக்கும் சக்தி தாய்ப்பாலுக்கு இருக்கிறது குழந்தைகளுக்கு தாய்ப்பால் பல வழிகளிலும் ஆரோக்கியத்தைத் தருகின்றது. பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதலில் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கின்றனர் ஆனால் சில வாரங்களிலேயே பல்வேறு காரணங்களைக் காட்டி நிறுத்திவிடுகின்றனர்.. இது மிகவும் தவறானதாகும்.
ஆறுமாதங்கள் முதல் ஒரு வயது வரை தாய்ப்பாலில் குழந்தைகள் வளர்வதே ஆரோக்கியமானது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் மருத்துவமனைகளுக்குச் செல்லும் வாய்ப்பு 80% குறைகிறது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அதிக எடையுடன் வளரும் ஆபத்திலிருந்தும் தப்பிக்கிறது. குழந்தையின் தாடை வளர்ச்சிக்கும் இது பயனளிக்கிறது. குழந்தைப் பருவத்தைக் கடந்து வாலிப வயதை அடையும் போது கூட குழந்தைகள் சரியான எடையில் வளர சிறு வயதில் குடிக்கும் தாய்ப்பால் உதவுகிறது. தாய்ப்பாலை குறைந்தது முதல் ஆறுமாதங்கள் குடித்து வளரும் குழந்தைகள் நீரிழிவு நோயினின்றும் தப்பி விடுகின்றன.
குறிப்பாக குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைக்கு ஆறுமாதங்கள் வெறும் தாய்ப்பாலை மட்டுமே கொடுத்து வர வேண்டும். அது பரம்பரையாய் நோய் தாக்காமல் தடுக்கும் என்பது ஆனந்தமான செய்தி. தாய்ப்பால் ஆரோக்கியமான நோய் எதிர்ப்புச் சக்தியை குழந்தைகளின் உடலில் உருவாக்குகிறது. வணிக நிறுவனங்கள் தரும் எந்த சத்துப் பொருளும் தாய்ப்பாலின் குணாதிசயங்களுக்கு வெகு தொலைவிலேயே நின்று விடுகின்றன என்பதே உண்மை. வணிக நிறுவனங்கள் தங்கள் விற்பனைப் பொருட்களை பிரபலப்படுத்த தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துமாறு ஊக்கப்படுத்து கிறது.
தாய்ப்பாலைக் குடித்து வளரும் குழந்தைகள் வலிகளைத் தாங்கும் வலிமை படைத்ததாகவும் இருக்கின்றன. . தாய்ப்பாலில் இருக்கும் அமிலத் தன்மை எண்டோர்பின் எனப்படும் வலி நிவாரணி அதிகம் சுரக்க வழி செய்வதே இதன் காரணமாம். தாய்ப்பாலில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளும் அடங்கியிருக்கின்றன. அது இயற்கையாகவே அமைந்து விட்டதனால் மிக எளிதாக இயல்பாகவே செரிமானமாகி விடுகிறது. வயிறு தொடர்பான நோய்கள் குழந்தைகளுக்கு வருவதைத் தடுக்கிறது. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளெனில் அவர்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பது மிக மிக அவசியம்.
ஆரோக்கியத்தை மீண்டெடுக்கவும், துவக்க கால சிக்கல்களிலிருந்து விடுபடவும், நீடிய ஆயுளுக்கும் அது வழி செய்யும். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவு வளர்ச்சியில் சற்று முன்னே நிற்கின்றன. போதிய மூளை வளர்ச்சியும், சுறுசுறுப்பும் அத்தகைய குழந்தைகளுக்கு இருப்பதே இதன் காரணமாகும்.