உனக்காக ஓர் கவிதை

அடங்காத ஆணவத்தால்
அன்பை தொலைத்துவிட்டாய்...
ஏதோ கொஞ்சம் ஒட்டியிருந்த
பண்பையும் தொலைத்துவிட்டாய்...
சாத்திரம் நீயும் பேசி
ஆத்திர இருளில் மூழ்கிவிட்டாய்...

கற்றதை மறந்தாய்
பெற்றதை துறந்தாய்...
கானல் நீரைத் தேடுகின்றாய்...
இனிமையான சொற்கள் ஆயிரமிருந்தும்
வன்சொற்கள் பேசவே ஆர்வம் கொள்கிறாய்...

ஆடையில் அழுக்குப் படிந்தால்
அசிங்கமென்று நினைக்கிறாய்...
ஆன்மாவின் அழுக்கை துடைக்க
ஏனோ நீயும் மறுக்கிறாய்...

நான்கு பேர்களை ஒன்றாய் கண்டால்
நாசமாகப் போகவென வையுறாய்...
நட்புக் கூட்டம் சேர்ந்து விட்டால்
போலி நாடகமாடி கலைக்கிறாய்...
நல்லோர்போல வேடம் அணிந்து
நடிப்பால் நீயும் பிரிக்கிறாய்...

மக்கள் யாவரும் ஒன்றேயென
மகத்துவம் அறிந்திட மறுக்கிறாய்...
மானிடப்பிறவி அரியது என்பதை
அறிந்திட்ட நீயும் மறைக்கிறாய்...

ஒருநாள் நீயும் அழிவாய் என்பதை
உன் ஆணவத்தாலே மறக்கிறாய்...
அய்யன் வள்ளுவன் சொன்னதையெல்லாம்
ஆழக்குழியில் போட்டுத் தள்ளுகிறாய்...

கவிதைகளென்ற பெயரில் நீயோ
கண்டதையெல்லாம் கொட்டுகின்றாய்...
கணினி கையில் கிடைத்ததுவென
கண்டபடி நீயும் தட்டுகின்றாய்...

தெரிந்தோ தெரியாமலோ
இந்த மண்ணில் நீயும் பிறந்துவிட்டாய்
திட்டும்பொழுதும் தமிழை இறைத்து
தமிழ்ப்பற்று கொஞ்சம் காட்டிவிட்டாய்...
அதனால் உன்னை விட்டுவிட்டோம்
அன்னைத்தமிழால் நீயும் தப்பிவிட்டாய்...!

எழுதியவர் : muhammadghouse (6-Nov-13, 11:40 pm)
பார்வை : 161

மேலே