அது ஒரு வசந்த காலம்
அந்த நாளில்
சிறகு இல்லை
பறந்திருக்கிறேன்!
வாலில்லை நாயாய்
ஓடியிருக்கிறேன் !
தாயின் உள்ளங்கை
தாண்டி ஒடி பழகியதெல்லாம்
வயல் வரப்புகள் தான் !
நடந்து நடந்து
பாதங்கள்
தேயவில்லை
வளர்ந்தன!
மென்மையான பாதங்களில் தான்
கல்லிலும் முள்ளிலும்
தாண்டி குதித்தேன் !
அந்த
ஆரம்ப பள்ளிகூடத்தில் தான்
எனக்கு
அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது!
அவசியமாய்
உயிர்மெய் எழுத்துகளை
முழுங்கி சொல்ல
வேண்டுமென்று!
வீட்டுக்கும் பள்ளிக்கும்
ஒரு மையில் தூரம் !
வழியோ மிக
நெருக்கம் !
ஓடைக்கரை பூக்களை விட
இலந்தை மர முட்களோடு
சிநேகிதம்!
பழம் இருப்பதால்!
கண்மாய் கரையில்
என் ஆடைகளுக்கென்றே
தனியிடம் ஒதுக்கபட்டிருக்கும் !
நாட்காட்டி தாள்களை போலவே
தினம் தினம்
தேய்ந்து கொண்டேயிருக்கும் புத்தகம்!
கடன் வாங்கி கழித்தலை
கற்று கொண்டது
பள்ளியில் அல்ல!
பயிறு விற்கும் பாட்டியிடம்!
சாப்பாட்டு சத்தெல்லாம்
வாய்பாட்டில் கரைந்தது!
வளர்ந்தேன்
அறிவில் அல்ல ...
ஓரிரு சட்டையும்
ஓட்டை விழுந்த டவுசரும்
வைத்து வாழ்ந்த காலம் அது!
அது ஒரு
வசந்த காலம்!
* * *