கண்ணாடிக் குடுவைக்குள் ஒரு மனிதன்
நிர்வாகப் பிரிவில் பணி புரிபவர்கள்
இயந்திர மனிதர்களாக
மாறுவதில் முன்னிலையில்
இருக்கிறார்களாம்.
பொருள் விற்பனைப் பிரிவிலோ
வரை படத்தில்
ஒவ்வொரு புள்ளிகளாய் ஏற்ற
கல்லடி படும் ஜீவன்களின்
பரிதாபமான நிலை.
மனித வள மேம்பாட்டுத்
துறையினர்களோ
கடவுளின் சாயலில்
உருமாற்றம் ஆகிக்கொண்டு
இருக்கிறார்களாம்.
பணப்பட்டுவாடா கருவூல
நிர்வாகத்தினர்கள்
பண்டிகை நாட்களில்
முன் பண மனுதாரரின்
திரிசங்கு நிலையை
தீர்மானிக்கும் அவதாரங்களாய்
இன்றளவும் இருக்கிறார்கள்.
தரையில் இறங்காத பந்தாய்
அனைவரின் எரிச்சல்களையும்
என்னுள் சுமக்கும
அலுவலக உதவியாளரான
நான் மட்டும் மனிதனாய்
இந்தக் கண்ணாடிக் குடுவைக்குள்.