ழகரத் தமிழ்

பேராசியர் வெ. அரங்கராசன்
முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர்
கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி
கோவிற்பட்டி... 628 502
கைப்பேசி: 98409 47998
__________________________________________

வாழ்க ழகரத் தமிழ்

எழில்பொழில் பொழிசெழும் நறுந்தேன் ஒழுகும்
அழகுமிகு தமிழைக், கெழுதகை தமிழை,
வழிய வழிய மொழிந்து மொழிந்து
அமிழ்த னைய விளைசுவை கள்தமை,
குழைத்து வழங்கிடும் களிதமிழை,..நாளும்
மகிழ்ந்து பருகு; மெழுகென உருகு......

பழம்பெரும் கெழுதமிழ் வழங்கிடும்
வளம்சூழ் விழுமியங் கள்தமை,
முழங்கிடும் ஒழுக்கங் கள்தமை,
கழிபேர் இலக்கியங் கள்தமை,
விழியென, வாழ்வின் வழியெனப்,
பழகு; மொழிந்தபடி ஒழுகு......

குளிர்நிழல் கழனியில் விளைநறுங்
கழைபிழி நிறைசுவை களை,நனி
தழுவிடும் முகிழ்தமிழ் தழைத்திடப்,
பழியெனும் குழியினில் புழுவென
விழும்நிலை இழிநிலை எழாஅது,
அழிவிலா ஒழுக்கினில் நுழைந்திடு......

குழவியின் மழலையின் மொழியென,
மழைமுகில் குழுவென, யாழென,
குழலென, முழவென, விழுதெனத்
திகழ்தரு தமிழினைத் தெளிந்திடு......
பொழுதெலாம் விழிப்புடன் பொழிந்திடு.....
புகழ்மிக விழுத்தமிழ் வளர்த்திடு.....

பழுத்த,முப் பழங்களும் விழுந்து
தொழுதிட விளங்கிடும் சுழல்தமிழைக்,
கமழ்ந்திடும் முழுமுதல் அறங்களைப்
பழுதிலா வழக்கென, விழுதென,
வழுவிலா விளக்கென வழுத்திப்
பிறழ்நிலை உறழ்நிலை ஒழித்தெழு......
இழுக்கென அழுக்கினை அழித்துவிடு.....
அழித்திடும் விழுமத்தை மழித்துவிடு......

வேழமென, வீரநடை போடும்....இன்ப
ஆழியென, ஆழம்மிக வாழ்தமிழைத்,
தாழ்விலா வாழ்த்தினைத் தருந்தமிழை,
வாழையென, நிலைமொழிப் பேழையென,
ஊழிகள் முழுதும் நீள்தமிழைப்,
பீழைகள் ஒழித்திடும் தமிழைக்கேள்.....

அறத்தமிழைக் கழித்தாய்......
பிழைபல இழைத்தாய்.....
மழுங்கிடக், கதிகலங்கிடப்
பழுதினை உழுதனை......

பொழுதது ஒழியட்டும்...இனிக்
குழவுதமிழை விழைந்திரு.....
செழித்திரு; பழுத்திரு......

தெளிதமிழை அழைத்திரு......
பிழைத்திரு; தழைத்திரு.....
வழாநிலையில் எழுதமிழை
வாழ்நிலையில் ஆழ்த்திடு.....

தமிழினைப் பிழையற எழுது.....
பிறமொழி கலப்பது பழுது.....
நம்மொழி செம்மொழி இருவிழி....
அம்மொழி மறப்பது பெரும்பழி....

பிழையிலா நிலையினில்
ழகரத்த ஒலித்துவிடு.....
எழுதிடும் பொழுதினில்
ழகரத்தைப் பிழைக்கவிடு.....

சொற்பொருள் விளக்கம்
1. கெழுதகை = உரிமை
2. விழுமியங்கள் = சமுதாய மதிப்பீடுகள்
3. கழனி = வயல்
4. கழை = கரும்பு
5. விழுமம் = துன்பம்
6. ஆழி = கடல்
7. பீழைகள் = துன்பங்கள்
8. குழவு = இளமை
9. கெழுமை = வளமை

எழுதியவர் : பேராசிரியர் அரங்கராசன் (12-Nov-13, 8:48 pm)
பார்வை : 149

மேலே