நாம் சிரிக்கும் நாளே திருநாள்
![](https://eluthu.com/images/loading.gif)
வெதும்பிப்போன மனதிற்கு
வெள்ளையடித்துப் போவதுதான்
பண்டிகைகளின் பணி!
ஆனால்....
பணமெனும் நீர் உறிஞ்சியே
பண்டிகைப் பயிர்கள் வளர்வதால்
அதை நட்டுவைத்த பாவத்திற்காய்
நடுத்தெருவில் நிற்கிறது
நடுத்தர வர்க்கம்!
ஆண்டவனுக்குப் படையல் வைக்க
அடகுக்கடையில் வளையல் வைக்கும்
அவல நிலையில் அவர்கள்!
அடுத்தடுத்து வரும் பண்டிகைகளால்
அடகுக்கடைக்காரர்களுக்கே இங்கு
அதிக மகிழ்ச்சி!
விழாக்கால வேட்டுச் சத்தங்களின்
விரிவான பின்னணியில்
ஒன்று சீட்டுக்கடை இருக்கும்!
அல்லது சேட்டுக்கடை இருக்கும்!
பற்றாத குறைக்கு
மொத்தமாய் வாங்கிய கடன்
புத்தாடைக்குள் புகுந்த பின்னும்
புத்திக்குள் உறுத்தி நிற்கிறது!
செயற்கையாய் சிரிக்கும் கலையை
இயற்கையாய்ப் பெற்றவர்கள் இந்தியர்கள்!
நாம் இயற்கையாய் சிரிக்கும்
இனிய நாளையே
இனி பறைசாற்றுவோம்
பண்டிகை நாளென!