வேருக்கான மலர்கள்அகன்

மரம் பூக்கவில்லை எனும்
கவலை நிலத்திற்கும் எனக்கும்..!

மொட்டு வைத்தது மரம்....,

தொட்டு விடாமல் கேட்டேன்...
"உன்னுள் உள்ள மலரின் இதழ்கள்
செல்லும் இடம் எதுவாக
உனக்கு விருப்பம்-

ஆலயங்களினுள்ளா ?"

===கருவறைக்குள்ளும் கற்பை
===களங்கப்படுத்தும் செயலை
===தண்டிக்காத சிலைகளுக்கு நான் எதற்கு...
மொட்டு முழங்கியது...

"எந்தத் தலைவரின் கழுத்துக்காய்
உன் காத்திருப்பு.? "
===ஊழலுக்கு தலை நுழைத்து
===வாரிசுகளுக்கு நாடளிக்கும்
===வரலாற்றுப் பிழைகளுக்கு நானா..!
சீறியது மொட்டு!!!

"கூந்தல்களில் குடியேற
கொள்கைமுடிவு உண்டோ...?"
===பூவைப்பதும் பொட்டிடுவதும்
===கூந்தல் முடிப்பதும்
===அடிமை அடையாளங்களென
ஆர்பரிப்போருக்கு நானா ...!!
அரற்றியது மொட்டு!!!

"பின் எங்குதான் உன் மலர்தல்..?"
வியர்த்துக் கேட்டேன்...

இனங்காக்க இன்னுயிர் இழந்தோரின்
இடுகாட்டு பயணத்திற்கு...
வாழ்நில உரிமைக்கு உடலடிப்பட்ட
வாலிபங்களின் வலி ஒத்தடத்திற்கு......
உழைப்போர் உயர
குரலும் விரலும் நீட்டி மரித்த
குமுகாய பொறுப்பு நிறை
எழுத்துக்களுக்கு ...

அல்லாவிடின்
மலரவே மனமின்றி
வேருக்குத் தீனியாகவே...!!!!

எழுதியவர் : அகன் (14-Nov-13, 12:09 pm)
பார்வை : 76

மேலே