இனிதாய் உணர்த்தும் செய்தியிதே
இனிதாய் உணர்த்தும் செய்தி இதே
வேலை சூழ்ந்த வையகத்தில் ,
வேலை வணங்கி அருள் பெறுவாய்;
நாளும் இதனைச் செய்திடினே,
வாழும் உலகம் தழைக்குமே.
காலை எழுந்து கடமையினை
களிப்பாய் செய்து கழித்திடுவாய்;
இன்பம் நல்கும் இயற்கையுமே ,
இனிதாய் உணர்த்தும் செய்தி இதே .
கொண்டை உள்ள சேவலுமே
கொக்கரக் கோ என்றிடுவான்,
கூரை மேலே ஏறிடுவான் ,
ஊரை எல்லாம் எழுப்பிடுவான் .
பட்டு வண்ணப் பறவைதாம்,
சிட்டுப் போலே சிறகடிக்கும் ;
கட்டுக் கட்டாய் கற்பனையை
புட்டுப் புட்டாய் புகன்றிடுமே .
பந்து போன்ற பகலவனும்
வந்து வானில் தோன்றுவான் ;
கதிர் உமிழ்வான் காலையிலே ,
கடிது செல்வான் மாலையிலே .
தினமும் கடமை ஆற்றிடுவாய் ,
உன்னை உலகம் போற்றிடுமே ;
சோம்பித் திரியும் பேய்களையே
தேம்பி அழவும் செய்திடுமே .
வல்லநாடன் . இல . கணேசன் .
[14.11.2013 அன்று குழந்தைகள் தினவிழாவுக்காக
எழுதியது .]