நத்தை
ஓலை குடிசைக்கு
வழியில்லை எனக்கு!
ஒட்டுவீட்டோடு
ஓய்வெடுக்கும்
சோம்பேறி நத்தையே!
கண்ணிருந்தும் குருடனாய்
கரங்களோ தடவித் தடவி
எங்கே போகிறாய்?
உலகத்தை சுற்றவா?
முயன்று விடு!
செத்தால் தூக்கி போட
ஆளிலைதான்!
அதுக்காக கல்லறையை
தூக்கிக்கொண்டேவா
இருப்பது!
சுமந்து பெற்றவளை
மறந்து விட கூடாது என்பதற்காக..
கடவுள் உன்னையே
சுமையாக்கி விட்டானோ?
எத்தனை நாளுக்குத்தான்
தண்ணீர் குடத்துக்குள்
வசிப்பாய்? வெப்பம்
ஆமை ஓட்டையும்
எரிக்கும் காலம்
நாளையே!
எங்கள் முன்னேற்றத்தோடு
ஒப்பிட்டால் உனது வேகம்
ஓராயிரம் மடங்கு அதிகம்!
காதலிப்பவரெல்லாம்
நத்தையாகத்தான்
இருக்க வேண்டும்!
சுமக்கவும் முடியாமல்!
இறக்கவும் முடியாமல்!
ஒரே வீட்டுக்குள்
ஒன்பதுபேர்கள்!
சொந்த வீடு
கனவு
கனவாய் போனது
எங்களுக்கு!
உனக்கு மட்டும்
ஒரு வீடு!
சொந்தவீடு!
செத்தாலும்
உன் வீடு
உனக்கே சொந்தம்!
மனிதனாய் பிறப்பினும்
நத்தையாய்
பிறப்பதே மேலோ !
* * *
கோடீஸ்வரன்