அந்த மகிழ்ச்சி

அந்த மகிழ்ச்சி

நீர்நிறைந்த குளத்தில்
நீந்திக் குளித்தபோது--மூழ்கித்
தரைமண் எடுத்துத்
தண்ணீருக்கு மேலே வந்து
தலைநீட்டிய போது--மனத்தில்
தலைகாட்டியது மகிழ்ச்சி----

தீபாவளி பொங்கல்
நாள்களில் பத்துப் பத்துத்
சோளத் தோசைகளைச்
சாம்பாரில் குளிப்பாட்டி
ஆசை ஆசையாய்
அள்ளிச் சாப்பிட்ட போது
துள்ளி எழுந்தது மகிழ்ச்சி---

கம்மஞ் சோற்றைக்
கட்டித் தயிரோடு--வயிறு
முட்ட உண்டபோது--மனத்தைக்
கட்டிக் கொண்டது மகிழ்ச்சி---

ஏரிக் கரையில் அமர்ந்து
தூண்டில் போட்டுக்
காத்துக் கிடந்த போது
மீன்ஏதும் மாட்டாத போதும்
மனத்தில் வந்து
மாட்டியது மகிழ்ச்சி---

மேல்சட்டையும் இல்லமால்,
காலுக்குச் செருப்பும் இல்லாமல்
துள்ளிக் குதித்து---நான்
பள்ளிக்கு ஓடிச் சென்று
பாடம் படித்தபோது--மனத்தில்
கூடாரம் போட்டது மகிழ்ச்சி---

அந்த நாள்கள் மகிழ்ச்சிக்குச்
சொந்தமான நாள்கள்---
இந்த நாள்கள்--மனம்
நொந்த நாள்கள்---
அந்த நாள்கள் எப்போது
சொந்த நாள்கள் ஆகுமோ?

எழுதியவர் : பேராசிரியர் அரங்கராசன் (22-Nov-13, 8:25 pm)
சேர்த்தது : Arangarasan V
Tanglish : antha magizhchi
பார்வை : 89

மேலே