நட்புக்கு இலக்கணம்
நட்புக்கு இலக்கணம்
======================================ருத்ரா.
நட்புக்கு இலக்கணம்
குவார்டர் கட்டிங்க் அல்ல.
நட்புக்கு இலக்கணம்
ஓசி சிகரெட்டும் அல்ல.
நட்புக்கு இலக்கணம்
மச்சி மொழியில்
காது குடைவதும் அல்ல.
நட்புக்கு இலக்கணம்
குட்டிச்சுவர் அரட்டைகளும் அல்ல.
நட்புக்கு இலக்கணம்
கழுத்தைக்கட்டிக்கொண்டு
கிரிக்கெட் ஸ்கோர் அலசலும் அல்ல.
நட்புக்கு இலக்கணம்
தல மதுர என்று
முதல் ஷோவுக்கு
சேர்ந்தே கை கோர்த்து
முண்டியடிப்பதும் அல்ல.
பரஸ்பரம் ஃபிகர்களுக்கு
பால் காவடி பன்னீர் காவடி
தூக்கி ஓட உதவிக்கு வருவதும் அல்ல.
நட்புக்கு இலக்கணம்
அவனுக்கு கண்ணீர் வருமுன்னமேயே
இவன் கை "கர்ச்சீஃப்" ஆவது.
இவன் நெஞ்சின் நெருஞ்சி
அவன் நெஞ்சில் நெருடுவது.
அவன் துக்கம்
தொண்டை அடைக்கும் முன்பே
இவன் அதை லேசாக்குவது.
இவன் கவலையில்
மூச்சு திணறும்போதே
அவன் தன் மூச்சை
இரவலாக தருவது.
அவன் உதடு குவிக்கும்போதே
அது சிகரெட்டுக்கு
நெருப்பு கேட்டு அல்ல
அது "உதவி"என உச்சரிக்கவே
தயங்கும் உதடுகள் என
உட்குறிப்பறிந்து உதவுவது.
இவன் முகம்ப்படலத்தில்
மயிர்க்கீற்று போல்
சுருக்கம் விழுந்தபோதும்
அந்த மனச்சுருக்கம் நீவி விடும்
நேசத்தின் "களிம்பு"தடவுவது..
நட்பின் இலக்கணம்
எங்கோ ஒரு அகராதிக்குள் இல்லை.
அது
இதயங்களுக்கு அருகிலேயே
துடித்துக்கொண்டிருப்பது.
========================================ருத்ரா