மழை வரும்வரை விடுமுறை தான்

வெட்கமின்றி வெட்ட வெளியில்
தழுவித்திரியும் மேகங்கள்!

இதன் ஊடலை
ஒரு மனதாய் உறுதி செய்யும் முனங்கல்கள்!(இடி)

அதன் அந்தரங்கம் சித்தரிக்கும்
நிழற்பட ஒளிச்சிதறல்கள்!(மின்னல்)

இன்னும் மூவாயிரம் வருடம்
மூளை பிழிந்தாலும்
மூலக்கூறு காண இயலாத
மண்வாசனை திரவியங்கள்!

வானம் வாடகைக்கு விட்ட
வானவில் வண்ணங்கள்!

வருடத்தில் சிலமுறை மட்டும்
தலைக்கு குளிக்கும் மரங்கள்!

தலைபாரம் தாங்காமல்
தரை தட்டும் புற்கள்!

வாழ்நாள் குறைவது தெரியாமல்
வயிறு நிரப்பும் ஈசல்கள்!

கூடலுக்கு கூடுகள்
தேடும் பறவைகள்!

கூட்டுக்குள் சூடு தேடி
தாய் மடி புகும் குஞ்சுகள்!

குடித்த போதையில்
குப்புறக் கிடந்து
குடி கெடுக்கும் குறுவைகள்!

காணததைக் கண்டதுபோல்
கண்ணீர் வடித்து
கரைகளைக் கரைக்கும் கண்மாய்கள்!

சட்டமின்றி,சத்தமின்றி
தேசியமயமாகும் தெருக்கால்வாய்கள்!

தெருக்களில் சோதனை ஓட்டம் காணும் காகிதக்கப்பல்கள்!

ஆறும்,அறுபதும்
குடையின் கை பிடித்து நடைபயிலும்
ஒற்றை சாலைகள்!

தேனீர் தேடி மனிதர்கள் மொய்க்கும்
தெருமுனை தாஜ் ஓட்டல்கள்!

அடக்குமுறை இன்றி கலைந்துபோகும்
கருப்புக்குடைகளின் கண்டணப் பேரணிகள்!

பேருந்தில் முன் பதிவின்றிக் கிடைக்கும்
கதவுகளில்லா ஜன்னல் ஓர இருக்கைகள்!

கம்பிகளுக்கு காவலாய் நிற்க்கும்
மிச்ச சொச்சங்கள்!

மழைக்குடையாய் உருமாறும்
பயணிகள் நிழற்க்குடைகள்!

கதவைத் தட்டாமல்,கால் வைக்க இடமின்றி
தண்ணீர் குடியேரும் குடிசைகள்!

இனம் வளர்க்க
இரவை இரவல் கேட்க்கும்
தேரைகளின் இரைச்சல்கள்!

இனாமாய் வீடுகளுக்குள்
தண்ணீரைத் தாரை வார்க்கும்
விரிசல் விழுந்த ஓடுகள்!

வாங்கியதை வட்டியும்,முதலுமாய்
விடியும் வரை வடியவிடும்
வக்கத்தவன் வீட்டு ஓலைகள்!

இனியாவது கார்காலம் வந்தால்,
இவைகள் உங்கள் கண்களில் படட்டும்!

ஆனால் சுற்றத்தின் முந்தானைக்குள்
முடங்கிக்கிடக்கும் இவைகளுக்கு
மண்ணில் மழை வரும் வரை விடுமுறைதான்....

எழுதியவர் : ஜெகன் (25-Nov-13, 3:32 pm)
பார்வை : 129

மேலே