வீதியில் உலவும் விதியின் சுமைகள்

பெத்த புள்ள யாருமில்ல
பேரன் பேத்தி பாக்கவில்ல
சொத்து பத்தும் ஏதும் இல்ல
சொந்த பந்தம் காணவில்ல !
காஞ்ச வயிறு பசிச்ச போதும்
கையும் ஏந்தி பழக்கமில்ல
ஊரு சனம் தூங்கும் போதும்
கண்ணு ரெண்டும் உறங்கவில்ல !
உழச்சு இன்னும் வாழ்ந்து பாக்க
உடம்புல தான் தெம்பு இல்ல
பொறந்த மண்ணு போயி பாக்க
பொறந்தவக யாருமில்ல !
காலு ரெண்டும் கல்லு குத்த
கருவி ஒன்னு நடக்குதப்பா
ஆடையெல்லாம் முள்ளு குத்த
அருவி ஒன்னு அழுகுதப்பா !
கோணியில தோணி போட்டு
உசிரு இங்க நீந்துதப்பா
குருதி வத்தி கூன் விழுந்தும்
நம்பிக்கையில் வாழுதப்பா !
உழைத்து வாழ வேண்டும்
பிறரை மதித்து வாழ வேண்டும்
நம்மை சுமந்து வாழ்ந்த உயிரை
கோணி சுமக்க வாழ்ந்திராதே !