பயணங்கள் முடிவதில்லை

கனவுகளின்
அத்திவாரங்களோடு
மெலெழுப்பப் படுகின்றது
மரணத்தின்
பதாகை ஏந்திய
வாழ்க்கையின் பயணம்.

எல்லைகளற்ற
வாழ்க்கை என்று
தனித்துவ படுத்த முடியாத
அசௌகர்யங்களை
முன் நிறுத்திக்கொண்டு
முன்னேறிச் செல்கிறது
மரணத்தின்
சுதந்திர பயணம்

வாழ்க்கை கவிதைக்கு
கடைசி தலைப்பை
கண்ணீரால் வைத்துக் கொண்டு
கவலையில்லாமல்
பிரசுரம் செய்கின்றது
அந்த இறுதிப் பயணம்

பாகுபாடற்ற
சமநோக்கு கொண்ட
அரசியல் லாபம் தேடாத
கருணைகளற்ற
மரணத்தின் பயணம்
காலங்கள் கடந்து வாழும்
கடவுளின் சிந்தனை.

கோடிகள் குவித்தவன்
இலஞ்சம் கொடுத்து
ஏமாற்ற முடியாததும்
எதுவுமற்றவன்
இல்லாத கொடுமையில்
கேட்டு கிடைக்காததுமான
மரணத்தின் மகத்துவம்
புரிகின்ற வேளையில்
புரியாமல் போகின்றது
வாழ்க்கையின் தத்துவம்

கடலினில்
கலந்த பின்னும்
முற்றுப் பெறாத
நதிகளின் வேர்களைப்போல்
உடலினை விட்ட பின்னும்
தொட்டுப் பார்க்காத
சுவாசிக்கும் காற்றின்
தடங்களைத்தேடிய
வாழ்க்கையின் கணங்கள்
முற்றுப் பெறும்
அந்திமங்களை
அடையாளம் காட்டும்
இறுதிச் சேவகன்

இன்று உனக்கென்ற போதும்
நாளை எனக்கான
நாளை நிச்சயித்தப்படியே
ஒரு தனியார் ஊழியனைப்போல்
ஓய்வின்றி தொடர்கின்ற
மரணத்தின் பயணம்
ஒரு இரயிலப்போல
ஓடிக்கொண்டுதான் இருக்கிறது
பிரயாணிகள் யார் என்று
தெரிந்து கொள்ளாமலேயே

எல்லோருக்குள்ளும்
இருக்கின்ற
மரணத்தின் பயணச்சீட்டு
திகதிகள் இல்லாத
திறந்த சீட்டுக்களானதால்
கடைசிவரைக் காத்திருக்கின்றோம்

என்றாலும் போகவேண்டியவர்களை
விட்டு விட்டு
போகக் கூடாதவர்களை
ஏற்றிச் செல்லுகின்ற
மரணத்தின் வண்டியின்
அலங்கோலங்கள் கண்டு
தவித்துப் போகும் நாங்களும்
ஒருநாள் தனித்தே
பயணித்து விடுகிறோம்.

எங்களின்
வாழ்க்கை பயணம்
எங்களோடு முற்றுப்புள்ளி
அடைந்து விட்டாலும்
முற்றுப் புள்ளி இல்லாத
பயணங்களாக தொடர்ந்திருக்கும்
மரணத்தின் பயணங்கள்
என்றும் முடிவதில்லை,

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (29-Nov-13, 3:10 am)
Tanglish : maranthin payanam
பார்வை : 185

மேலே