என் வாழ்வின் ஒரு வரிக்கவிதை நீ

காகிதமெடுத்தேன் வெண்மையாய்,

காதலி உனக்கொரு கவிதையெழுத

உனக்கொரு கவிதையா?? உனைப்பற்றி கவிதையா??

எப்படி? எவ்வாறு? எதைப்பற்றியென

ஏகப்பட்ட கேள்விகள் எனக்குள்ளே ஒருபுறம்!

கவிதைக்கே கவிதையாயென கலக்கமும் மறுபுறம்!

இருந்தும் தொடர்ந்தேன் இறுமாப்புடன்

கருப்பொருள் "நீ" யென்பதால் கவலையின்றி!

கண்மூடித் தேடினேன் கனாவில் உனை

கருமேகமாய் காரிருள் கரைந்திருந்த கனாவில்

கலைக்கும் கதிரொளியாய் வெண்மதி உன் முகம்

தேடிய தேவதை தெரிந்ததும் தொடங்கினேன் கிறுக்கலை

காகிதத்தில் கசிந்துருகியது காதல்!

காகிதமும் காதல் பாடத் தொடங்கியிருந்தது தூவலுடன்

தூவலின் முத்தங்களில் காகிதம் முழுக்க காதல் தடங்கள்

முற்றும் முடித்ததும் படித்துப் பார்த்தேன் பலமுறை ​

முழுமையாய் உணர்ந்தேன் ஒன்றை மட்டும்



என் வாழ்வின் ஒரு வரிக்கவிதை "நீ" யென...!

எழுதியவர் : vickyjegan (30-Nov-13, 12:52 am)
பார்வை : 162

மேலே