வாழிய எங்கள் கவிஞனே

அரங்கம் அதிர கவிதை படிப்பவர் ஆயிரம் பேர்
அகிலம் அதிர கவிதை வடிப்பவர் சிற்சிலபேர்
அரங்கம்,அகிலம் இரண்டும் அதிரும் படியாய்
அன்னைத் தமிழை மாற்றியமைத்தாய் சரியாய்
வாழிய எங்கள் கவிஞனே வாழிய எங்கள் கவிஞனே

எழுதித்தந்தாய் அன்னை மண்ணின் அழகை -உன்
எழுத்தில் வடிந்தது ஈழத்தமிழரின் அழுகை
களத்தில் தமிழன் வெல்லும் போது
உனது கவிதை துள்ளும்- தமிழன்
கழுத்தில் கத்தி வீழும் போது
உன் பாடல் அழுது கொள்ளும்
வாழிய எங்கள் கவிஞனே வாழிய எங்கள் கவிஞனே


எழுத்தில் வடித்தாய் இனத்தின் துயரை முழுதாய்
என்றும் இருப்பாய் கவிதை மரத்தின் விழுதாய்
சரித்திரம் மாறும் போது வருவாய்
சத்தியவானாக - உன்
சந்ததி காத்துக் கிடக்குதையா
நாளும் பொழுதாக
வாழிய எங்கள் கவிஞனே வாழிய எங்கள் கவிஞனே

தாலியை கழுத்தில் சுமந்தபடி உன் தாரம்
காளியை தானே நம்பியிருக்கிறாள் நாளும்
அடுத்த வருடமேனும் நீயெம்
அருகிலிருப்பாயா? - போர்
தொடுத்த பகைவன் உன்னை
கூட்டிக் கொண்டு வருவானா?
வாழிய எங்கள் கவிஞனே வாழிய எங்கள் கவிஞனே

எழுதியவர் : மு. யாழவன் (3-Dec-13, 1:27 am)
பார்வை : 84

மேலே