கண்ணீர்
கண்ணீர்
மௌனம் பேசியதைக் கேட்டு
விழி வழியே ஒரு மொழி
கண்ணீர்...
உணர்வைத் தொடுவதும்
உயிரில் கலந்ததும் கண்ணீரா..?
பிறக்கையில் பேசும்
பொதுமொழி கண்ணீர்..!
ஆசைகள் ஆளும் நேரத்திலும்
அழிவைக் காணும் தூரத்திலும்
அழகும் கண்ணீர்,
அச்சமும் கண்ணீர்,
ஆனந்தம் அணியும் அணிகலன் கண்ணீர்....!
வேருக்கானால் வானத்துக் கண்ணீர் சிறப்பு,
ஊருக்கானால் உன் விழிக்கண்ணீர் சிறப்பு...!
செந்நீர் வழிந்தால் உடல் உருகும்,
கண்ணீர் வழிகையில்
கொஞ்சம் உயிரும் உருகும்...
விழிக்கு விழி
கண்ணீரின் காரணங்கள் மாறும்,
சுவையெல்லாம் மாறிவிடுமோ..?
மாறினால்
இனித்திடும்
சந்தோசக் கண்ணீர்....!
ஒரு கை போதுமே
பல விழி கண்ணீர் துடைக்க,
இடக்கையோ
வலக்கையோ
உனக்கே உரியது....
உணர்ச்சியெல்லாம்
செயற்கையான பிறகு
பொய் சொல்கிறது,
ஆயுதமாகிறது,
சுயநலமாகிறது,
கள்ளத்தனமாகிறது
இந்தக் கண்ணீர்....!