தெரு மட்டை வீரர்கள்

வெயிலில் வீதியில் வெள்ளையர்
பொழுதைக் கொள்ளை அடிக்க
கண்டுபிடித்த மட்டை விளையாட்டை*
வகுப்பில் இருக்குவேண்டிய நேரத்திலும்
விளையாட்டாய் விளையாடும்
கால்கிழவ # கல்லூரி செல்லா
கல்லூரி மாணவ வீரர்கள், வம்பர்கள்!

தெரு மைதானம்!
பதினைந்தடி அகலம் நூறடி நீளம்
அதுபோதும் விளையாட்டாய் விளையாடும்
மட்டை விளையாட்டுக்கு.

விளையாட்டாய் வீணர்கள்
விளையாடும் மட்டை விளையாட்டை
இரசிக்க ஐம்பதைத் தாண்டிய
இரசிகையும் ஒருவர்.
ஊரெல்லாம் வலம் வந்து
முச்சந்தியில் நடுவீதியில்
மேடையின்றி ஊர்வம்பில் ஆர்ப்பரிக்கும்
குடும்பப் பெண்டிர் கழக அமைப்பாளர்;
தலைமைப் பேச்சாளர்!

ஒருவன் மட்டை அடிக்க
இன்னொருவன் பந்தை வீச
மற்றவர்கள் விக்கெட்டைச்
சுற்றி நின்று ஒவ்வொரு
பந்து வீச்சுக்கும், மட்டை அடிக்கும்,
கைதட்டி ஆர்ப்பரிக்கும்
ஊர்வம்பு கழகத்தின்
உறுப்பினர் கூட்டம்.

தலைவியும், தொண்டர் படையும்.
மட்டையாட்ட இரசிகர்களும்
இடியாகச் சிரிப்ப்பார்.
அண்டை வீடுகளில்
இளைப்பாருவோர் எல்லாம்
அதிர்ச்சியுடன் ஜன்னல் வழியாக
எட்டிப்பார்த்து சபிப்பர் கல்லூரி
செல்லாமல் விளையாட்டாய்
விளையாடி இடையூறோடு
உயிருக்கு இணையான நேரத்தை
வீணெ களிப்போடு கழிக்கும்
’மாண்புமிகு’ மாணவச் செல்வர்களை.

மட்டைக் கலைஞர்களுக்கு
வாய் திறந்தால் பச்சைத் தமிழில்
பேசும் பெருந்தலைவி பெற்ற
அருந்தவ மகர்தான் தானைத் தலைவர்.
கண்களால் எப்போதும்
பெண்பாலரைப் படிப்பவர்
கச்சிதமாய் புரூஸ்லியின்
உடம்பையும் கொண்டவர்;
சிலசமயம் தேர்வுக்குப்
பாடமும் படிப்பார்.

இளைஞர் திலகங்கள்
பிறர்க்(கு) இடையூறு செய்தாலும்
மட்டை விளையாட்டை விளையாட
ஏற்பாடு செய்திடும் பெற்ற
மகனின் கூர்ந்த நுண்மதியை
“யாம் பெற்ற இன்பம்
இவ்வையகம் பெறுக” எனும்
பண்டைத் தமிழரின் பரந்த
மனப்பான்மையை “ஈன்ற பொழுதினும்
பெரிதுவக்கும் தன்மகனை
மட்டையோடு வெட்டிப் பயல்களின்
தலைவனாய் வீதியில் வெயிலில்
விளையாட்டை விளையாட்டாய்
விளையாடப் பார்ப்பது”
என்று புளங்காகிதம்
அடையும் பெற்ற
பெருந்தகையின் நெஞ்சு.
பேரின்பப் பெருவிழா
வாரத்தில் மூன்று நாள்.
“மகனெ நீ வாழ்க” என்று
புல்லரிக்கும் பெற்ற மனம்.





* கிரிக்கெட் # கஜினிகளாய் இருந்து தேறாமல் தேறி கல்லாமல் கற்க வேலைக்குச் சேர்ந்து ஊதியம் தேடும் வயதில் ஊதாரிகளாய் நேரத்தை வீணடித்து மற்றவர்ளுக்கும் இடையூறு செய்யும் இளைஞர் திலகங்கள் ஊர்தோறும் (பல குழுக்களாய்) உள்ளது யாவரும் அறிந்த உண்மைதான். (இதில் பள்ளீப்பிஞ்சு ‘முதியோரை’யும் சேர்க்கலாம். மட்டை விளையாட்டைக் குறை சொல்லவில்லை. விளையாட வேண்டிய நேரத்தில் விளையாட வேண்டிய இடத்தில் அதை விளையாடினால் நல்லது.





எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (9-Dec-13, 8:58 pm)
பார்வை : 126

மேலே