அன்புப்பிணைப்பு

”இது தான் உங்க முடிவா???” அழுது அழுது சிவந்த முகத்தைக்கூட துடைக்க இயலாமல் துவண்டவளாய் சுவரில் சாய்ந்தாள் மதுமிதா...

” முடிவு இல்லைடி இது தான் தொடக்கமே எனக்கு.... சந்தோஷமா வாழப்போற வாழ்க்கையின் தொடக்கம்....”

” இப்படி சொல்ல உங்களுக்கு எப்படி மனசு வருது? ”

” வேறே எப்படி சொல்லச்சொல்றே சொல்லு “... பெட்டியில் வேகமாக துணிகளை அடுக்கிக்கொண்டே தர்மா...

” என்னைவிட்டு நீங்க போகவிடமாட்டேன் நான் “ ஆவேசமாக எழ முனைந்தாள் மதுமிதா...

” இங்கப்பாரு இந்த வீராவேசமான பேச்சு என்னிடம் வேண்டாம் சொல்லிட்டேன் “ அழுத்தமான குரலில் தர்மா....

” குழந்தைகளுக்காக கூட யோசிக்கலை இல்ல நீங்க? ”மூக்குறிஞ்சினாள் மதுமிதா....

” ஆமாம் அதனால தான் குழந்தைகள் ஸ்கூல்ல இருந்து வரதுக்கு முன்னாடி கிளம்பறேன்..” தலை சீவிக்கொண்டே தர்மா...

” மனசாட்சி இருக்கா உங்களுக்கு தெய்வம் எல்லாம் பார்த்துண்டு தான் இருக்கு “ கறுவினாள் மதுமிதா....

” தெய்வம் பார்த்துட்டு தான் இருக்கட்டுமே இல்ல பார்க்காமல் தான் போகட்டுமே நான் கண்டிப்பா எடுத்த முடிவுல இருந்து மாறப்போறதில்ல.. ஷர்மிக்கிட்ட போகத்தான் போறேன். உன்னால முடிஞ்சதை பார் “ சத்தமாய் பாத்ரூம் கதவு அறைந்து சாத்தப்பட்டது....

முகத்தில் அறைந்தது போல உணர்ந்து கோபமாய் எழுந்தாள்....

பெட்டியில் அடுக்கப்பட்ட உடைகள் எல்லாம் எடுத்து கிளறி எல்லாம் கலைத்தாள் மதுமிதா....

” நான் உங்களை போக விடமாட்டேன்.. என் உயிரே போனாலும் சரி.. எனக்கு நீங்க வேணும் குழந்தைகளுக்கும் நீங்க வேணும்... நீங்க இல்லன்னா எங்களால கண்டிப்பா சந்தோஷமா வாழமுடியாது.” மனதில் அழுத்தமாய் உறுதியுடன் சொல்லிக்கொண்டே பாத்ரூம் கதவருகே நின்று காத்திருந்தாள் தர்மாவின் வரவுக்கு....

ஷவர் நின்று கதவு திறந்தது.... கம கமவென்ற சாண்டல்வுட் சோப் வாசனையுடன் தர்மா வெளியேற...

சட்டென்று தர்மாவின் காலில் விழுந்து அழத்தொடங்கினாள் மதுமிதா....

” என்னை விட்டுட்டு அவக்கிட்ட போகும் அளவுக்கு என்னிடம் என்ன தவறு இருக்கு சொல்லுங்க....” கதறினாள் மதுமிதா...

” உன் இந்த பொய் அழுகை எல்லாம் என்னிடம் பலிக்காது மது... எழுந்திரு மரியாதையா.. காலை விடு... நான் கிளம்பணும்.. நீ என்ன சொன்னாலும் சரி... நான் போறதுல இருந்து பின் வாங்கப்போறதில்ல....”

” நானும் என் உறுதில இருந்து மாறப்போறதில்லை. உங்களை போகவும் விடப்போறதில்லை...”

” ஆங்காரமாய் கத்தாதே மதுமிதா... என் அருமை தெரியாத உன்னிடம் வாழறதை விட என்னையே வேணும்னு ஆசையா கேட்கும் ஷர்மியோட என் வாழ்க்கையின் மீதி நாட்களை வசந்தமா தொடரப்போகிறேன்....காலை விடு...” உதறத்தொடங்கின தர்மாவை கோபமுடன் பார்த்தாள்..

” உங்களுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு பார்த்து பார்த்து நான் செய்றமாதிரி அவ செய்வான்னு நினைக்கிறீங்களா?? ”குரோதமுடன் கேட்டாள் மதுமிதா...

” அவசியமே இல்லை மது.... எனக்கு என்ன பிடிக்குது பிடிக்காதுன்னு அவளை சிரமப்படுத்தமாட்டேன்... அவளுக்கு என்ன பிடிச்சிருக்கோ அதையே சாப்பிட பழகிப்பேன். அவளுக்கு பீட்ஸா பர்கர் பிடிக்கும்னா அதையும் நான் சாப்பிட பழகிப்பேன்...”

” ஐயோ உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கு....” பதறினாள் மதுமிதா....

” வாழ்க்கை வாழறதுக்கு தான் மது....”

” ஒவ்வொரு நாளும் அழுது வடியிற உன் முகத்தைப்பார்க்கிறதை விட எண்ணை வழிற உன் முகத்தை பார்க்கிறதை விட ஷர்மியின் முகத்தைப்பார்க்கலாம்.. இவ்ளோ பேசுறியே என்னைத்தேடி யாராவது ஃப்ரெண்ட்ஸ் வந்தா என்னைப்பேச விடாம விரட்டுறே... ”

” உங்க ஃப்ரெண்ட்ஸ் வந்தா நமக்கிடையில் பிரச்சனையை உண்டு செய்றாங்க வந்தாங்கன்னா சாப்பிட்டு சும்மா போகவேண்டியது தானே உங்க ஃப்ரெண்ட்ஸ்...” பொருமி தீர்த்தாள் மதுமிதா...

” இதோ இந்த உன் வாயாடித்தனம் தான் எனக்கும் பொறுக்கலை... நீ எப்ப கல்யாணம் ஆகி வந்தியோ அப்ப தொடங்கின வாய் இன்னும் அடங்குதா பாரு? ”தர்மாவின் நிஷ்டூரக்குரல்....

” எப்பவும் என்னையே குறைச்சொல்லுங்கோ.....கல்யாணம் ஆகிவந்து நான் என்ன சந்தோஷத்த கண்டேன்.... புலம்பல்கள் தொடர்ந்தன ”தர்மாவை..

” உங்களிடம் நான் சண்டை போடமாட்டேன்... ப்ளீஸ் என்னைவிட்டு போகாதேங்கோ ” தர்மாவின் கையை பிடித்துக்கொண்டு கெஞ்சத்தொடங்கினாள் மதுமிதா.

“ எப்பவும் நான் உன்னிடமே இருந்தா ஷர்மி வருத்தப்படமாட்டாளா மது? கண்ணத்தொடச்சுக்கோ குழந்தைகள் வர நேரமாகிட்டுது பாரு துளசி மாடத்துல விளக்கேத்து.... ஷர்மி இப்ப குழந்தை உண்டாகியிருக்கா... உன்னைப்போல அவளும் எனக்கு மருமக தானே? மசக்கையா இருக்கும் அவளுக்கும் வாய்க்கு ருசியா எதுனா செய்து போட எனக்கு மனசு இருக்காதா நீயே சொல்லு மது? கவலைப்படாம இரும்மா...

நான் போயிட்டு போன் செய்றேன்... ரெண்டு மாசம் இருந்துட்டு ஓடி வந்துடறேன் சரியா? என்ன தான் என் பிள்ளை காதல் திருமணம் பண்ணிண்டாலும் ஷர்மியும் நம்ம வீட்டு பொண்ணு தான்.... சமர்த்தா இரு.. அழுது ஊரைக்கூட்டாதே.... சேகர்

வந்தான்னா அவன்கிட்ட சொல்லு.. ரெண்டே மாசம் ஓடி வந்துருவேன்.... உன்னை நான் மருமகளா பார்க்கல... என் மகளா தான் பார்க்கிறேன்.. குழந்தைகள் வந்துட்டா பாட்டி பாட்டின்னு என்னை போகவிடாது.. புரிஞ்சுக்கோம்மா மது ”மதுமிதாவின் கண்களை துடைத்துவிட்டு துரிதமாக வாசற்படி தாண்டினாள் தர்மாம்பாள் கையில் பெட்டி எடுத்துக்கொண்டு தன் இரண்டாது மகன் வீட்டுக்கு பஸ் ஏற....

எழுதியவர் : கதம்ப உணர்வு தளம் (13-Dec-13, 3:50 pm)
பார்வை : 127

மேலே