தாரகை
வான மரத்தின்
மேக இலைகளின் நுனியில்
இரவில் தொங்கும் பனித்துளி.
நிலாக் கோழி
கொத்தித் தின்ன
எந்தத் தாயோ
இரைத்து விட்ட
வெள்ளைச் சோறு.
இருட்டுக் கம்பளியில்
விழுந்த பொத்தல்கள்
விண் தோட்டத்தில்
இரவில் பூக்கும்
வெள்ளிப் பூக்கள்.
உதிர்ந்தால்
மண்ணில் விழமுன்
கைகளில் ஏந்தி
மனவானில்
கண் சிமிட்டும் என்
கண்மணியின் கண்ணோரம்
வைத்துப் பார்க்க
ஆசைப் படுகிறேன்
அவளின் முறுவலைப்போல
நீயும் பிடிவாதம் பிடிக்கிறாயே..
ஒ..தாரகைகள் என்றாலே
ஆடம்பரங்களின்
அவதாரம் என்பது
உங்களில் இருந்துதான்
பிறப்பெடுத்ததோ?
மெய்யன் நடராஜ் -இலங்கை.