என் அருமை நண்பா

என் முகம் மறந்தாலும் எனக்கு
உன் முகம் மறவாது சண்முகமே !
நட்பின் உருவாய் வாழ்ந்தவனே
நட்பின் ஆழத்தை உணர்ந்தவனே !
இடியாய் தாக்கியதே இதயத்தில்
இன்முகம் கண்டதும் இன்று எனக்கு !
உறங்கும்போது உன்னை பார்த்ததில்லை
உயிரில்லா உடலாய் நீ உறங்குகிறாயே !

ஆலமரமாய் நிழல் தந்தாயே
அடிப்பட்ட மரமாய் சாய்ந்தாயே !
படைத்தவர்கள் இங்கே கதறியழ
காணும் விழிகளோ வழிகிறது !
சட்டென்று நீ பறந்து சென்றதால்
பட்டமரம் ஆனது தாரமும் தளிர்களும் !
விட்டுவிட்டு சென்றாய் விண்ணிற்கு
விழுதுகள் சுவடுகளாய் மண்ணிற்கு !

எதையும் தாங்கிய இதயம் அல்லவா
வீறுகொண்டு எழுந்திடும் வீரனல்லவா !
காத்திருக்கிறோம் உன்னை சுற்றியே
காலம் தாழ்ந்து நீ எழுவாய் என்றே !
உன்னால் வளர்ந்தவர் ஆயிரமாயிரம்
உன்னை விரும்பியவர் பல்லாயிரம் !
பாசமுள்ள நண்பனே மறந்தாயோ நீயும்
படைகளாய் பக்கத்தில் இருந்தோமே !

விலகி சென்றிட எண்ணம் ஏன் வந்தது
விளக்கி சொல்லிட யாரும் இல்லையே !
இனி எங்குதான் காண்போம் உன் முகத்தை
இனிதே பழகிய உன் திரு முகத்தை !
நம்பத்தான் முடியவில்லை என்மனதால்
நானும் நீயும் இனி பிரிந்திருப்பதை !
ஆறுதல் கூறிட என்னால் முடியவில்லை
ஆறுதல் அளித்திட எனக்கு நீயே இங்கில்லை !

பழனி குமார்

( இன்று காலை நிகழ்ந்த என் அருமை நண்பனின் திடீர் மரணம் என் இதயத்தை தாக்கியதால் எழுந்த இரங்கற்பா இது. ... 30 ஆண்டு கால நண்பனின் பேரிழப்பு )

எழுதியவர் : பழனி குமார் (30-Dec-13, 4:02 pm)
Tanglish : en arumai nanbaa
பார்வை : 741

மேலே