என் நாட்காட்டியுடன் கடைசி நாள்
காலை எழுந்தவுடன்
காலெண்டெர் கிழிப்பேன்!
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு பொய்யை
உண்மை போலவே
உணர்த்திய தினப்பலன் !
பொய்தான் என்று
உணர்ந்திருந்தாலும்,
பார்ப்பதில் ஒரு வித
மகிழ்ச்சி எனக்கு!
இன்று காலையில்
கிழிக்கும் போது
நாட்காட்டி என்னுடன்
நட்புடன் கேட்டது!
நாளையுடன் எந்தன்
பணிகள் முடியும்!
என்னைத் தூக்கி
எங்கே எறிவீர்?
எனக்குள் துக்கம்
தொண்டையை அடைத்தது!
காலெண்டரை நினைத்துக்
கலங்க ஆரம்பித்தேன்!
பன்னிரெண்டாண்டுகள்
படித்த பள்ளியைப்
பிரிந்தபோது எழுந்த
ஒரு துக்கம்!
ஐந்து ஆண்டுகளாய்
ஆடிய கல்லூரியை
அழுகையுடன் நான்
பிரிந்த துக்கம்!
பகல் முழுவதும்
வேலை செய்யாமல்
இரவு வந்தபோது
மனைவியிடம் கேட்டேன்!
இதற்கா இப்படிக்
கலக்கம் கொண்டீர்?
பூஜை அறையிலேயே
வைக்கலாம் என்றாள்!
நல்ல ஒரு தீர்வினைத் தந்த
என்னவளைக் கட்டிக் கொண்டேன்!
லெட்சுமி படத்துடன் நாட்காட்டியைத்
தயாரித்தவனை எண்ணியபடி!
(தோழர்கள் ,தோழிகள் ,,அப்பாக்கள், அம்மாக்கள்,
அண்ணன்கள் ,தம்பிகள்,அக்காக்கள்,தங்கைகள் ,மற்றும் எழுத்துலக உறவுகள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!)