முத்தாக வாவா புத்தாண்டே
புத்தாண்டே--!நீ
முத்தாக வேண்டும்--அன்பின்
வித்தாக வேண்டும்--இன்பச்
சொத்தாக வேண்டும்---பண்புக்
கொத்தாக வேண்டும்---
இத்தரை மீதுளோர் அத்தனை பேரும்
மொத்தச் சுகமும் முழுதாய்ப் பெற்றுச்
சித்திரை நிலவாய்ப் பத்தரை மாற்றாய்
நித்தம் நித்தம் சிரித்திட வேண்டும்---
முத்தமிழ் வித்திய சித்தாந்தம்
தித்திக்கும் திருக்குறள் தத்துவம்
எத்திக்கும் என்றென்றும் வாழ்வாகிச்
சித்திக்கும் சத்தியம் வரவேண்டும்---
வித்திய விதைகள் அத்தனையும்
பத்துநூறாய்ப் பல்கிப் பெருகி
நித்திலக் குவியலாய்க் குவித்திடும்
உத்திஒன்று உழவர்க்கு வேண்டும்---.
புத்தகம் படிக்க வேண்டும்--
வித்தகம் படைக்க வேண்டும்--
அத்தர் கத்தூரி மணம்போல்
முத்திரை குத்திட வேண்டும்--
தத்தி நடக்கும் குழந்தையின்
தத்தை மொழிகேட்டு--மனத்
தத்தளிப்பு தீர்ந்திட வேண்டும்--
முத்தப் பொழிவால்--நெஞ்சைக்
குத்தும் சித்திர வதைகள்
சத்தமிலாது சாய்ந்திட வேண்டும---
அத்திப் பூப்போல் அரிதாய் இலாமல்
உத்தமச் சிரிப்பை உதிர்த்திட வேண்டும்--
மத்தைப் போல்துயர் மனத்தைக் கடையினும்
சித்தம் கலங்காச் சத்தியும் வேண்டும்--
நத்தை போல நகர்தலை விட்டு
வித்தைக் குதிரையின் வேகம் தொட்டு
நித்தமும் உழைத்திடும் உத்தர வதனை
மெத்தச் சரியாய் மேற்கொள வேண்டும்--
சித்திரத்துத் தாமரைப் பூப்போல்
புத்துணர்ச்சி பூத்திட வேண்டும்--
ஒத்துவராது ஒதுங்குவோர் தம்மொடும்
ஒத்திசைவோடு ஒழுகுதல் வேண்டும்--
குத்து மதிப்பாய்க் கொண்டு விடாமல்
முத்துக் குளிப்போர் தம்போல்--எதிலும்
சித்தம் செலுத்திச் சிந்திக்க வைக்கும்
சத்தியும் சாத்தியம் ஆதல் வேண்டும்--
கத்தை கத்தையாய்க் குவியும் பணத்தால்
மொத்தச் சுகமும் குத்தகை--என்று
கத்தும் பொத்தல் மனத்தவர் எல்லாம்
பித்தம் செத்திடப் புத்தொளி பெறவேண்டும்--
எத்தித் திரிவோரும் திமிரோடு--எதிலும்
அத்து மீறி அலைவோரும்--எங்கும்
வத்தி வைத்து வாழ்வோரும்--இருள்
நித்திரை நீங்கப் புத்திபெற வேண்டும்---
கத்திக்கு மலர்வளையம்
வைத்திடல் வேண்டும்--
புத்திக்கு மலர்மாலை
அணிவித்தல் வேண்டும்--
கொத்தடிமைப் பித்துக்
கொள்கைக் கொடுமை
அத்தனையும் செத்துமடிந்து
வீழ்ந்திட வேண்டும்--
புத்தன் ஏசு நபிகள் காந்தி
அத்தனை பேரும் வித்திய அறத்தால்
புத்தம் புதிய சத்திய உலகம்
புத்துயிர் பெற்றுப் புகழ்பெற வேண்டும்...
+++++++++++++++++++++++++++++++++++++++++++