வேர்பாய்ந்த விழுதுகள்
வேர்பாய்ந்த விழுதுகள்.
************************************
பரந்தன் முல்லைத்தீவு வீதி நீளம் இடம்பெயர்ந்து ஓடுபவர்களால் நிறைந்து இருந்தது. கண் கூசியபடி எழும் சூரியக் கதிர்கள் அன்றைய தினத்தை மழையின்றிய தினமாகப் பிரகடனம் செய்தது. வீதிக்கு வருவதும் வாகனத்தைக் கண்டதும் இறங்கி நடப்பதுமாக அந்த வயோதிபரைப் பார்க்க முடிந்தது. கையில் ஒரு தூக்குப்பை வைத்திருந்தார்.
ஒருசில துணிமணிகள் அதற்குள் இருக்கும் என நினைக்கிறேன். நடந்து கொள்ளும் பொழுது கையோடு இணைபிரியாமல் ஆடுகின்ற கைப்பையில் உடுப்புக்கள் மட்டும்தான் இருக்கிறது என்பதைப் பறைசாற்றியது. காலின் செருப்பு மட்டும் பாதங்களைப் பாதுகாத்துக் கொண்டிருந்தது. வயது கூடிய தோற்றம். ஆனாலும் கூனலில்லாமல் அவரைப் பாதுகாத்தது தேகம்.
பின்னால் நடந்து கொண்டிருக்கும் என்னைக்கூட துணைக்கு அழைக்காமல் நடந்து செல்லும் அவரது துணிவு கொஞ்சம் பிரமிக்கத்தான் செய்தது. ஒரு உழவு இயந்திரத்தின் இழுவைப் பெட்டியில் சிகரம் மாதிரி மக்கள் நிறைந்து கடந்து செல்வதை பிரமித்தபடி நின்றார் அவர். நெல்லு மூடைகள், உழவுக்கான இயந்திரப் பகுதிகள் நிறைந்து இருக்க அதன் மேலேயே இருந்தவர்களும் வாகனமும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்ததே என்பது சொல்லாமலே தெரிந்தது. இழுவைப் பெட்டியின் பின்பகுதியில் இருக்கும் அந்தச் சிறுவன் தனது செல்லப்பிராணியான அந்த நாயை மட்டும் அதன் கயிற்றைப் பிடித்தபடி இருந்தான். வாகனத்துக்குப் பின்னாலேயே பொடிநடையில் நாயும் நடந்து கொண்டிருந்தது.
எங்கே போகிறோம் என்று தெரியாத சில வீட்டு நாய்களும் அந்த நாயைப் பார்த்ததும் அதன் பின்னாலே தாமும் நடக்கவென நினைத்து ஓடிவந்தன. அனாதரவாக தன் எசமானர்களைப் பிரிந்துவிட்ட அல்லது இழந்துவிட்ட பொழுது அவைகளும் ஏதிலிகளாக இருப்பதைப் பார்த்து ஒரு பெருமூச்சு நீண்டு அடிவயிற்றில் இருந்து அவருக்கு வந்திருக்க வேண்டும். நின்று நினைத்து கண்களில் காதோரம் வழியாக சூடாய்க் கொட்டிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டார் அவர்.
"பின்னால் சென்று கொண்டிருக்கும் அந்த நாய்களைப் போலவா நானும் .." அவர் பெருமூச்சு அதைத்தான் சொல்லிற்றுப் போலும். நின்று நிலைத்து கொஞ்சம் புத்துணர்ச்சியோடு மீண்டும் வேகமாக நடக்கத் தொடங்கினார் அவர். துவிச்சக்கர வண்டியில் போவோரும், வீதியில் நடப்போருமாக விடுகின்ற சுவாசம் வெப்பக் காற்றாக மாறியிருப்பதை உணர்ந்தார் அவர். பின்னால் திரும்பிக் குரல் கொடுத்தார் அவர்.
"தம்பி.. தருமபுரம் எத்தனை மைற்கற்கள் இன்னும் இருக்கும்.." "ஏனையா..? இன்னும் நான்கு மைல் இருக்கும்”என உரைத்தேன்.
அந்தநேரம் பார்த்து இன்னொரு உழவு யந்திரம் இழுவைப் பெட்டியுடன் வந்து நின்றது.
அதில் இரண்டு இளைஞர்கள் இருந்தார்கள்.
"தர்மபுரம் வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெயர்ந்தோர் தங்கியிருக்கிறார்கள். அவர்களோடு வீதியோரம் நடப்பவர்களையும் கொண்டு செல்ல உதவி செய்கிறோம்..நீங்களும் வரலாம்.." என்றார்கள் இளைஞர்கள்.
"நீங்கள் யார்..?" என்றார் பெரியவர்.
"நாங்கள் தொண்டர் சபையில் வேலைசெய்கிறோம்.. தேசியத் தலைவர் நேற்று புதுக்குடியிருப்பு மற்றும் சில இடங்களுக்கு வந்து..இடம் பெயர்ந்தவர்களுக்கு உடனடி உதவிகளைச் செய்யும்படி உத்தரவிட்டிருக்கிறார்.. ஐயா.."என்றான் இளைஞரில் ஒருவன்.
எந்தவித உணர்ச்சியுமற்று நின்ற பெரியவர் இழுவைப் பெட்டியில் ஏறினார் .
அவரைத் தொடர்ந்து நானும் ஏறினேன்.
பெரியவரின் கோபப் புயலை இல்லைச் சோகப் பிடியை உடைத்தெறிய எண்ணிய நான் "ஏனையா உங்கள் குடும்பம் இங்கே இல்லையா..?"என்றேன்.
கண்களில் உதிரும் நீரை ஒருவிரல் துடைக்க..ஒருசில நிமிடங்களைக் கையிலெடுத்தார் பெரியவர்.
"உங்களின் துன்பதைக் கொஞ்சம் உடைத்து விட்டிருக்கிறேன் போலிருக்கிறது.."என்றேன் யான்.
"இல்லை.." என்ற பெரியவர் "..நீ எங்கிருந்து வருகிறாய்.."என்றபடி தொடர்ந்தார்.
"ஐயா திருக்கேதீஸ்வரப் பகுதியில் ஒரு கடையில் வேலைசெய்தேன் யான்..இராணுவம் வந்ததைத் தொடர்ந்து ஆறாவது இடமாக இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறேன்...."
"அப்படியானால் என்னைப் போல என்று..சொல்லு "என்று சொன்னார் பெரியவர். பெரியவரின் துயரத்தை உடைத்துச் சுயத்தைக் கிளறிவிட்ட துடிப்பு என்னுள் பெருகியது.
"எங்கிருந்து வருகிறீர்கள் ஐயா.."என கொஞ்சம் உருக்கமாகக் கேட்டேன்.
"உனக்கு யாழ்ப்பாண இடப்பெயர்வு தெரிந்திருக்குமென நினைக்கிறேன்..பார்க்கிற சாடைக்கு அப்பொழுது நீ. ஒரு ஒன்பது வயதுக்கும் குறைவாக இருந்திருப்பாய் என நினைக்கிறேன்.."என்றார் பெரியவர். பெரியவரின் பூர்வீகம் தெரிந்துகொள்ளுகிற உந்தல் என்னுள் உடைத்து எழுந்தது.
அன்றைக்கு அடிபட்டவன் தொடர்புகள் அற்றுத் துண்டிக்கப்பட்டிருக்கிறேன்.."என்றார் பெரியவர்.
கொஞ்சம் ஞாபகம் இருக்கிறது ஐயா..பாம்புகள் நெளியும் நீர்நிலைகளின் ஊடே மக்கள் தலையில் முடிச்சும், சிறியவர்களைக் கையில் கோர்த்தபடியும் நடந்து கைதடி நீரேரியைக் கடந்து சாவகச்சேரி நோக்கி வந்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது.."என்றபோது கொஞ்சம் உற்றுப் பார்த்தார் பெரியவர்.
"உன் காந்தப் பார்வையை எங்கோ கண்டமாதிரி இருக்கிறது.."என்றார் பெரியவர். அவரின் குடும்பத்து உறவை அறிந்து கொள்ள அவரது இந்தப் பதில் என் வேகத்தை அதிகரித்தது."உங்கள் குடும்பம் எங்கே..என்னானார்கள் பெரியவரே.." என்றேன்.
“நான் இப்பொழுது வன்னேரிக்குளத்தில் தனியேதான் ஒரு மாட்டுமாலில் பல வருடங்களாக இருந்தேன். ..இலுப்பைக் கடவை..நாச்சிக்குடா..வன்னேரி..அக்கராயன் குளம் எங்கும் அறுவான் வந்து குண்டு போடத் தொடங்கியதும் வெளிக்கிட்டனான்தான் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறேன்..”என்றார்.
"நீங்கள் இருந்த வீட்டுக்காரர்.."
"அவர்கள் புறப்பட முன் நான் வெளிக்கிட்டு விட்டேள். அங்கே எல்லாம் குண்டு போட்டு பல வீடுகள் சிதறிவிட்டதென அறிந்தேன்..நாச்சிக்குடா, வன்னேரி, அக்கராயன் குளம் எல்லாம் பிடித்து விட்டதாக அரசு அறிவிப்பு வந்ததாக ஒரு செய்தி இணையத்தில் கிடப்பதாக ஒரு தம்பி முருகண்டியில் சொன்னவன்..இப்பொழுது கேள்விப்பட்டன் இன்னும் சண்டை அங்கே நடப்பதாக..நான் இருந்த வீட்டுக்காரரும் வெளிக்கிட்டுத்தான் இருப்பார்..இடிவிழுந்தான் எறியும் குண்டுகளில்..யார்தான் அங்கு இருக்க முடியும் என்றார்..."அவர்.
"அப்படியானால் உங்கள் சொந்தக் குடும்பம் எங்கே.."
"யாழ்ப்பாண இடப்பெயர்வு சொன்னேன் தானே..இலட்சக் கணக்கான மக்கள் கால்மேல் கால்நெரிக்க நடந்து.. ஒருவர்மேல் ஒருவர் விழுந்து..அல்லோலகல்லோலப் பட்டு நடந்து வருகையின் எனது மகளும் பேரப்பிள்ளைகளும் என்னைக் கைவிட்டு விட்டார்கள்..."
"அப்படியென்றால்.."
"காலில் மிதிபட்டு நடக்க இயலாமல் வழிமாறி, பின்னர் கிளாலிக் கடல் ஊடாக கிளிநொச்சி வந்தபோதும், தமிழீழ காவற்துறையில் பதிந்தபோதும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை..தனிமையாக வாழ்ந்து இப்பொழுது கரைதெரியா ஓடம்போலே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்..பின்னர் சிலரின் செய்தியின்படி மகளும் மருமகனும் திருச்சியில் ஒரு அகதிமுகாமில் இருப்பதாகக் கேள்விப்படுகின்றேன்.."
"உங்கள் சொந்த இடம் எது ஐயா?"
"அளவெட்டி..என்பெயர் கந்தப்பு.. கந்தர் கந்தர் எனச் சொல்வார்கள்.."
"உங்கள் மகளின்பெயர் கமலம் தானே.."
"ஆமாம் தம்பி, கமலம் என்மகள். அவளைத் தெரிகிறது உனக்கு.."
“நான்தான் உங்கள் பேரன்..மாறன் தாத்தா.. இலட்சக்கணக்கான மக்களின் இடம்பெயர்வில் அம்மா, அப்பா அனைவரையும் தொடர்பின்றி நடந்தனான் திருக்கேதீஸ்வரைக்குச் சென்றேன்...உங்கள் முகத்தைக் கூட இப்பொழுது என்னால் அடையாளம் காணமுடியவில்லை...பெயர் மட்டும்தான் காதில் ஒலித்த வண்ணமிருந்தது..தாத்தா.."
"விடுபட்டுப் போனவர்கள் எடுபட்டுப் போகவில்லை பார்த்தாயா..காந்தம் என்பார்களே அது சொந்தத்திற்கும் உண்டு பேரா.."அவர் சொல்லி முடிப்பதற்குள்..
"பெரியவர்.." என்று ஏககாலத்தில் அந்த இளைஞர்கள் கூப்பிட்டார்கள். "என்ன பெரியவரே இந்தப் போர் உங்களை என்ன மாதிரியெல்லாம் அலைக்கிறது என்ற வேதனை உங்களிடம் தெரிகிறது..என்ன செய்கிறது..?"
"இல்லையில்லை..சுதந்திரம் என்பது சுமையில் இருந்து வரும் ஒரு பிரசவம் தம்பி.."
"தாத்தா.. "ஆரத் தழுவிக் கொண்டேன். இறுகப் பற்றியபடி என்னை அணைத்துக் கொண்டிருந்தார் தாத்தா..
"வேர் பாய்ந்த விழுதுகள்" என்ற அந்த இளைஞர்களின் குரல் எங்கள் காதுகளில் விழுந்து கொண்டேயிருந்தது
நன்றி *சம்ஸ்