அவாவினால் உயர்செய் அணி

==அவாவினால் உயர்செய் அணி ! கலிவிருத்தம்.==

[இப்பாடல்களுக்கு உரைசெய்து உதவிய Dr .கன்னியப்பன் அவர்களுக்கு எனதுமனமார்ந்த நன்றிகளைப் படைத்துக் கொள்கிறேன்.]

தேன்படி மலருடைத் தீந்தமிழ் நதியதில்,
வான்படி மேகமாய் வந்துபோம் கவியிடை
தான்படி கின்றவோர் தவித்தவாய் உயிரென
நான்படிந் தெழுந்ததால் நானுமோர் கவிஞனோ? 1

கருத்து:

” வானில் உலாவரும் மேகங்கள் போல, வந்து போகும் கவிஞர்களுக்கு இடையில், தவித்த வாய்க்கு தண்ணீருக்காக வரும் உயிர்களைப் போல, தேன் உறையும் மலர்களைத் தாங்கும் இனிய தமிழ் நதியினில்,நான் மூழ்கி எழுந்ததால், நானும் ஒரு கவிஞன் என்று எண்ணப்படுகின்றேனோ?”
===

ஈர்ந்த,நுண் பளிங்கென எழுத்தும் விளங்குமால்
சேர்ந்தவெண் புனலெனைச் சேருமாம் நிறங்களும்!
ஓர்ந்துணர் வுள்ளவர் உள்ளமும் பெரியதால்
தேர்ந்தெனை யூக்கவே தெரிந்ததிவ் விருதுமே! 2

கருத்து:
”அறுக்கப்பட்ட நுண்மையான வேலைப்பாடுள்ள பளிங்கு போல ‘எழுத்து’ தளமும் விளங்குகின்றதால், அதனோடும் இணைந்த வெண்மையான நீரோடையான என்னை, பல நிறங்களுடைய அழகும் சேருமாம். ஆராய்ந்து உணரும் உணர்வு உள்ளவர்கள், எனக்கு ஊக்கம் தர வேண்டித் தங்களுடைய பெரிதான உள்ளத்தின் காரணமாக, என்னைத் தெரிவு செய்து கொடுத்ததே இந்த விருது ஆகும்.”
===

குவாலெ னத்திரள் மணிகளுக் குள்ளொரு
தவாநெ டும்புவித் தடித்தகல் லாமெனை
உவாம தித்திறத் துள்ளமே கொண்டவர்
அவாவி னாலுயர் அணிசெய் விருதிதோ? 3

கருத்து:
”ஒரு மிகவிரிந்த இப்பூமியில் குவியலாகத் திரண்ட மணிகளுக்குள் தடித்த கல்லாகிய என்னை ,முழுநிலவு போன்ற மேன்மைபொருந்திய மனம் கொண்டவர்கள், என் மேல் உள்ள விருப்பம் காரணமாக உயர்ந்த அழகு செய்யும் நோக்கத்துடன் தேர்ந்து கொடுத்ததே இந்த விருது. “

==குவால் – குவியல், உவாமதி - முழுநிலவு ===

பாச முன்வரப் பகுத்த றிந்திடல்
மாசு முற்றதாய் மற்றவர் தம்முளே
பேச லாகுமோ? பேச்சிதும் தேவையோ?
நேச முற்றவர் நேர்செயல் ஆற்றிலேன்! 4

கருத்து:
”அன்பு முந்தி வர, ஆராய்ந்து அறியும் அறிவானது குற்றப்பட்டு விட்டது என்று மற்றவர் தங்களுக்குள் பேசப் போகுமோ? இத்தகைய பேச்சும் தேவைதானா? இப்படி ஒரு, நட்பு மனம் கொண்டவர்கள் செய்கைக்கு சமமாக யான் எதுவும் செய்ய ஆற்றுகின்றேன் இலேன்!”
***இணையதளப் படைப்பாளிகள் பேரவை, *****புதுச்சேரி-யினுக்கு இப்படைப்பினைக் *******காணிக்கையாக்கி மகிழ்கிறேன்*******

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (2-Jan-14, 11:40 am)
பார்வை : 422

மேலே