புதுமுகம்

மணி காலை 7.45. 7.30 க்கே வர வேண்டிய பேருந்து இன்னும் வரவில்லை.எல்லோர் முகத்திலும் பதற்றம்.அதிக போக்குவரது வசதிகள் இல்லாத ஊர் எங்களுடயது.ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து தான் வரும்.அதனாலேயே பேருந்தால் நண்பர்கள் ஆனவர்கள் அதிகம்.பேருந்தில் அனைவருக்கும் அனைவரும் பரிச்சயம்.காலையில் கல்லூரிக்கு செல்வதே சுற்றுலா பயணம் போல் ஜாலியாக இருக்கும்.

அன்று சற்று தாமதமாகவே வந்து நின்ற பேருந்தில் ஏறினோம்.வழியில் சிறிய‌ விபத்து என கண்டக்டர் காரணம் கூறினார்.வழக்கமாக நான் ஏறியதும் என்னை பார்த்து சிரிக்கும் சிறுவன் நான் வந்ததையும் கவனியாமல் எதையோ ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.அவன் மட்டுமல்ல,பேருந்தில் பலரும் அப்படித்தான் இருந்த‌னர்.அப்படி என்ன தான் ஆயிற்று என நான் திரும்பி பார்க்க, இதுவரை வழக்கமாய் பேருந்தில் வராத ஒரு புதுமுகம்.

என்னையும் அவனை ரசிக்க வைத்துவிட்டான் அவன்.எல்லாரும் பார்த்தவுடன் பயப்படும் படி இருக்க வேண்டிய அவன் அவ்வளவு அழகாக இருந்தான்.அவனைச் சொல்லி குற்றமில்லை.அது அவனை உருவாக்கியவன் செய்த தவறு.

கண்களில் விள‌க்குகள் மாறி மாறி பளிச்சிட,அழகான வண்ணங்கள் தீட்டப்பட்ட திருஷ்டி பொம்மை அனைவரையும் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.பாவம்! எத்தனை பேர் கண் பட்டதோ அந்த அழகான திருஷ்டி பொம்மைக்கு...

எழுதியவர் : ‍சரண்யா நந்தகோபால் (3-Jan-14, 2:22 pm)
பார்வை : 174

மேலே