கரிசல் மண்ணில் ஒரு காவியம் அத்தியாயம் 2
அவள் வீட்டையே தினமும் என் கால்கள் ஓயும் வரை சுற்றிச்சுற்றி வருகின்றன.ஆனால் சிறைக்குள் அடைப்பட்ட அந்தச்சிட்டை மட்டும் என்னால் காணமுடியவில்லை.கால்கள் ஓய்ந்தாலும் என் இளம் மனம் வாடாமல் தேடிக்கொண்டே இருக்கிறது.என்னைப்பற்றிக்கூட நான் அதிகமாக கவலைப்படவில்லை.அவளுடைய சுதந்திரம் இப்படி அநியாயமாக பறிக்கப்பட்டுள்ளதே என்பதுதான் என் ஆதங்கம்.பாவம் பாடிப்பறந்த அந்தப்பச்சிளம் குருவி எதற்காக இன்று பூட்டி வைக்கப்பட்டுள்ளது என்பது எனக்குப்புரியாவில்லை.கேட்டால் அவள் வயதுக்கு வந்துவிட்டாள் என்கிறார்கள்.
பருவம் அடைந்த பெண்ணை வயதுக்கு வந்துவிட்டாள் என்ற ஒரு காரணம் காட்டி அவள் ஒரு பாதுகாக்கப்படவேண்டிய பொருள் எனக் கருதி அவளைப் பிற ஆண்களின் கண்களில் படாமல் ஒளித்து வைப்பது அறிவுத்தனம் என்பது அவர்களின் அப்பாவித்தனம்.பெண் என்பவளும் சிந்திக்கத் தெரிந்த ஒரு மானுடப்பிறவிதான் என்பதை சமுதாயம் இன்னமும் ஒப்புக்கொள்ள மறுப்பதை எண்ணும்போது என்போன்ற மனித நேயம் மதிப்பவர்களுக்கு வலிக்காமலில்லை. எழுதுவதும் வாசிப்பதும்:பேசுவதும் பழகுவதும் சமுதாயத்தில் என்ன மாற்றம் விளைவித்துள்ளது என்பதும் எனக்கு ஏதும் புலப்படவில்லை.அதை புரிந்துகொள்ளும் வயதும் அனுபவமும் எனக்கு அப்போது இல்லை.இப்போதும் அந்நிலை சில கிராமங்களில் சில குடும்பங்களில் இல்லாமலில்லை.
இந்நிலை மனித மனங்களில் இன்னமும் ஏன் மிஞ்சியுள்ளது.பெண்களைப் பற்றிய ஐயமா அல்லது அச்சமா?கல்வியறிவு வளராமல் இருந்த அந்தக் காலம்தான் அப்படியென்றால் இன்று கல்வியறிவு வளர்ந்துள்ள நிலையிலும் தொடர்வதும் கவலையாகத்தான் உள்ளது.பாரதி சொன்ன புதுமைப்பெண்கள் வரிசையாக வரத்தொடங்கிவிட்டார்கள்.காலத்தின் கட்டாயம் பெண்களை கல்வி கற்கவும் பணிகளில் பரவலாக கடமை ஆற்றவும் காலம் கனிந்து வருவது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் பெண்களுக்கு ஏற்படக்கூடிய வன்கொடுமைகளை பார்க்கும் போது மீண்டும் பெண்களின் உரிமை பறிக்கப்பட்டு முந்திய நிலைக்கே நகர்தப்படுவார்களோ என்ற கவலையும் துளிர்க்கிறது.
இப்போது புரிகிறது அன்று ஏன் அவளுக்கு அந்நிலை என்று.அவள் வீட்டிலிருந்து என் வீட்டை பார்க்கும் வசதியாக ஜன்னல் ஒன்று உண்டு.அந்த ஜன்னல் பக்கமாக நின்று பாட்டொன்று பாடுவாள்.அந்தப்பாட்டு இப்போதும் என் நினைவுகளில் முனுமுனுத்துக்கொண்டே இருக்கிறது.
”கண்ணா கருமை நிறக் கண்ணா”
எனும் அந்தப்பாடல்தான் அது.ஆமாம் நான் கொஞ்சம் கருப்புதான்.ஆனாலும் பார்க்கப் பார்க்க என்னை யாருக்கம் பிடிக்கும்.அப்படித்தான் அவளும் சொல்வாள்.அவளோ தங்க நிறம்.தகதகவென தாராளாமாய் இறைவன் அப்படியொரு வண்ணத்தை அவளுக்கு அள்ளி வழங்கியிருந்தான்.அவள் சிரித்துவிட்டால் போதுமே அப்பப்பா மாலை நேர இளஞ்சிவப்பின் ஊடே வெள்ளொளி கீறிக்கொண்டு வருவதுபோல் ஒரு ஈர்ப்பு.
அப்படிப்பட்ட அழகுச்சிலையை அலங்கரித்து கம்பிக்கதவுகளுக்குள் பூட்டி வைத்தாற்போல் அந்த மங்கிய ஒளியிலும் அவள் பிரகாசிப்பாள்.இப்படிதான் தினம் தினம் அவள் தரிசனம்.அதுவும் அது கிராமத்து ஜன்னல் .முகம் மட்டும்தான்.தரிசனம்.சிறைச்சாலையில் கூட அப்படித்தான்.ஆனால் எட்டாத உயரத்தில் என்பார்கள்.அவளுக்கு அது எட்டும் தூரம்.ஆனால் நானோ எட்டி எட்டித்தான் குதிக்கவேண்டும்.நான் குதிக்கக் குதிக்க அவள் சிரிப்பாள்.அவள் சிரிக்கச்சிரிக்க நானும் குதிப்பேன்.
வாழ் நாளில் நிகழும் எத்தனையோ சந்திப்புகள் .ஆனால் அவை அத்தனையும் நினைவில் நிற்பதில்லை.சில நினைவுகள் மட்டுமே அழியாமல் நாளெல்லாம் நெஞ்சில் இன்னும் நித்தம் நித்தம் புதுப்பிக்கப்படுகின்றன.ஒரு நாள் வழக்கம்போல் அந்தப்பாட்டைப் பாடினாள்.அந்தப் பாட்டைக்கேட்டாலே எனக்குள்ளே ஒரு இனம் புரியாத துள்ளல்.ஜன்னலைத் தேடி ஓடோடி வந்தேன்.அப்போது என்னைக் கைஜாடையில் மெல்லிய குரலோடு
“டேய் ராசா உள்ளே வாடா “
என அழைத்தாள்.பதிலுக்கு நானும் மெல்லிய குரலில்
எதுக்கு?உங்க ஆச்சி இருக்கும்.அது “என ஆசையிலும் அச்சத்திலும் அசடு வழிந்தேன்.
“யாருமே இல்ல.ஆச்சி வயலுக்குப் போய்ட்டா.அம்மா.குளக்கரைக்கு துணி துவைக்கப் போய்ட்டா.அவங்க வர நேரமாகும்.வா!”
எனத் தைரியம் கூறி உள்ளே அழைத்தாள்.”
அப்படியா.சரி வாறேன்.”
எனத் துள்ளிக் குதித்து கஞ்சிக்கே வழி இல்லாதவன் கையில் பஞ்சுமிட்டாய் கிடைத்தால் எப்படி இருக்கும்?அப்படியொரு உற்சாகத்தில் வாசல் பக்கமாக ஓடினேன்.சாத்தியிருந்த கதவை மெல்லத் தள்ளினேன்.முன்பெல்லாம் எந்தப் பயமோ தயக்கமோ இன்றி சர்வசாதாரணமாக அவள் வீட்டிற்குள் போவேன் வருவேன்.ஆனால் இன்று ஏனிந்த அச்சம்.அதோடு ஒரு தயக்கம்.புரியவில்லை.
கதவைப் பிடித்துக்கொண்டே நின்றேன்.யார் வந்தாலும் சத்தம் இல்லாமல் ஓடிவிடலாம்.அப்படியொரு வசதியில் உசார் நிலையில் நின்றேன்.என்னிலையைப்பார்த்த அவள்
“என்னடா இது பிச்சைக்காரன் மாதிரி.உள்ள வாடா”என்றாள்.
இல்ல..............பரவாயில்ல இருக்கட்டும்.ஆச்சி திடு திப்புன்னு வந்தாலும் வந்துரும்.அது ஏதாவது சொல்லி உன்னத்தான் பேசும்.சொல்லு எதுக்குக் கூப்பிட்ட.”எனப்பயந்த நானும்.
“அடப்பாவி....ஏண்டா இப்படிப் பயந்து நடுங்கிற”
என தைரியத்தில் அவளும்.மாறி மாறி சொன்னதையே திரும்பத் திரும்பப் பேசிக்கொண்டிருந்தோம்.அவள் கதவுக்குப்பின்னாலும் நான் கதவுக்கு இடையிலும் நிற்கிறோம்.ஆனால் எப்போதும் போலும் உள்ள அந்த பழைய விளையாட்டுத்தனம் இப்போது எங்கே போனதோ விளங்கவில்லை.அவள் உள்ளே அழைக்கிறாள் நான் மறுக்கிறேன்.ஏதோ ஒன்று என்னை அவளிடமிருந்து என்னை விலகி நிற்கச்சொல்கிறது.ஏன்?
கொ`பெ`பி.அய்யா.
(தொடரும் )