தள்ளிவை கொள்ளிவை
சோம்பலை தள்ளிவை
பேராசைக்கு கொள்ளிவை
பெற்றிடு அறிவை
பெருக்கிடு உழைப்பை
வெற்றிக்கு சொல்லிவை
அச்சம் போனதெங்கே கேட்டுவை
காற்றை எதிர்கின்ற மூங்கில்தானே
காலத்தை வெல்லும் புல்லாங்குழல்.
உதயத்தை துயில் எழுப்ப
சங்கு கடல் முழங்கட்டும்
சமத்துவமாய் நாம் வாழ
சடங்கெல்லாம் ஒழியட்டும்
பிழைகள் எல்லாம் தானே
பிழைதிருத்திக்கொள்ளட்டும்
அகரமாகி போனவளே
ஆரணங்கே அச்சம் தவிர்
இடியோடு மின்னலும்தான் படையெடுத்துவந்திடினும்
கருமுகில்கள் புயலோடு வெகுண்டெழுந்து வந்திடினும்
அலைபுதையும் பெருங்கடல்கள் திரெண்டெழுந்துவந்திடினும்
துடுப்பேந்தும் கலமான
காரிகையே அச்சம் தவிர்
வாளை எதிர்கொள்ளும் துணிவிருந்தால் இங்கு
வெற்றி மகுடங்கள் சூட்டப்படும்
காற்றை எதிர்கொள்ளும் மூங்கில் தான்
காலத்தைவெல்லும் புல்லாங்குழல்...