​​​ஒற்றுமை ஓங்கட்டும்​,​ தமிழ்முரசு ஒலிக்கட்டும் ​ பொங்கல் விழா கவிதை போட்டி

மானமுள்ள மறவனும் விவேகமுள்ள வீரனும்
வாழ்ந்து மறைந்த தேசியமே நம் தமிழினம் !
முக்கனிசுவை முத்தமிழை சங்கம் அமைத்து
வளர்த்திட்ட பேரினம் தமிழ்தேசிய இனமே !

மூவேந்தர் காலத்தே முடமான ஒற்றுமை
பாவேந்தர் பாடியும் மாறாத நிலைதானே !
சிதறியுள்ள தமிழினமே சிந்திப்பீர் சிலநொடி
சிந்தையில் கொள்வீர் நம்இனப் பற்றுதனை !

கூடிநின்றால் கோடி நன்மையென மறந்தீரோ
ஓலமிடும் ஓநாயும் ஒடுங்குமென உணர்வீரோ !
கிரகம்வேறு குடியேறினாலும் தமிழர் மாறுவீரோ
அனைவரும் ஒன்றானால் அனைத்தும் வெற்றிதானே !

ஈழத்தின் இன்றைய நிலையை உணர்ந்தீரோ
குழுக்களாய் இருந்ததால் புழுக்களாய் அழித்தனரே !
தமிழினம் ஒன்றுதானே தத்தளிக்கிறது தரணியில்
தன்மானத் தமிழர்களே இதயத்தால் இணைந்திடுவீர் !

தாய்த்தமிழ் நாட்டிலும் பிரிந்திருக்கும் தமிழினமே
இதயங்கள் சேர்ந்தால் பாரதத்தையும் ஆளலாம் !
பைந்தமிழ் இனமே வையகத்தின் உயர்இனமே
பாசமுடன் ஒன்றுபட்டால் பாரினையே ஆளலாம் !

ஒற்றுமை காத்திட்டு வேற்றுமை களைந்திட்டால்
சாதனைகள் புரியலாம் சாதிமதமும் மறக்கலாம் !
ஓங்கட்டும் ஒற்றுமை ஒலிக்கட்டும் தமிழ்முரசு
தமிழ் தேசியஇனம் தங்கத்தேரில் உலா வரட்டும் !

எழுதியவர் : பழனி குமார் (11-Jan-14, 9:22 am)
பார்வை : 395

மேலே