விவேகானந்த ஜோதி
( இன்று உலகையே தன் ஆன்மீக ஆற்றலால் வசப்படுத்திக்கொண்ட சுவாமி விவேகானந்தரின் 151 ஜன்ம தினம் )
விவேகானந்த ....
ஆயிரம் சூரியர்கள் அணிவகுத்து நின்றாலும் - உன்
ஒற்றை பார்வையிலே ஒளியின்றி போகுமே
இந்திய தேசத்தின் இணையில்லா பெருந்துறவி - கட்டிய
முண்டாசு நிழலிலவை முகம்மறைக்கும் வெட்கத்தில் .
இலையாய் சருகாய் உதிர்ந்தே வீணாக - வாழ்க்கை
வெறுமையின் வடிவமா..... வேதனைதான் மீதமா..?
"அச்சமே மரணம் துச்சமே வாழ்வு " - அதிர
முரசு கொட்டி முழங்கினாய் போர்ப்பறை
ஒவ்வொரு மனிதரின் மரணத்தின் உள்ளும் - பிரிவின்
சோகம் வழிந்தோடும்; அறிவோ கண்மூடும்
உந்தன் இறப்பிலோ ஒவ்வொரு நொடியிலும் - புத்தனே
மரணம் பட்டதோ மரண அவஸ்தை
மரணமும் தலைவணங்கிய மாமனிதன் உன்னால் - உயிர்
நித்யமும் இருக்குமென்ற சத்தியமும் புரிந்தது
ஆன்மா விழித்தது எழுச்சியின் ஏந்தலே - உந்தன்
மூச்சுக் காற்றிலே மூண்டது ஞானத்தீ
அழுக்கு சட்டையை மாற்றுதல் போலே - ஆன்மா
வடிவம் மாற்றிடும் வகையன்றோ மரணம் ?
அழியாதது ஆன்மா ; ஆண்டவனின் பிரதியே - நாம்.
அண்ணலே உணர்த்தினாய் அமரநிலை எய்தினோம்
ஆதிமுதல் அவனியிலே அன்போடு அஹிம்சையை -தினம்
போதித்த நால்வேத புண்யபூமி பாரதம்தான்
சோதிஒளி பாரதம்தான் கீதவழி பாரதம்தான் - மானுட
நீதியே அதனடி நீளப் பணிவதுதான் .