அன்பு முதல் ஆன்மா வரை

கருவறை எனும் திருவறையில்
கருத்துடன் ஐயிரண்டு திங்கள்
கனிவுடன் காத்தவளே!
என்ன இது அதிசயம்
என் கண்ணில் தூசி விழுந்தால்
உன் கண்ணில் நீர் வருகிறதே
இதுதான் அன்பின் வறையறையோ?

அன்பு முதல் ஆன்மா வரை
அனைத்தையும் எனக்கே தந்துவிட்டு
உனக்கென தனிக்குணமாய்
தியாகத்தைக் கொண்டவளே!
தவறு செய்யும்போது
எல்லோரும்- எனை
திட்டினர் அதட்டினர்;
நீதான் அருகில் அழைத்து
அன்புடன் சொன்னாய்
“இனிமேல் செய்யாதே”

எனக்கொரு நோயெனில்
நீ பத்தியம் இருப்பாய்!
என்னை ஊரார் ஏசினால்
ஊரையே நீ போருக்கு அழைப்பாய்!
உண்ணாமல் நான்
ஒருநாள் இருந்தால்
உன் உலகமே
இருண்டதாயன்றோ துடிப்பாய்!
தும்மல் வந்ததும் இதயம் நின்று
இழந்துபோன உயிரை
அம்மா என்று உனையழைத்தே
மீண்டும் பெறுகிறேன்!
ஒருமுறை உயிர்தந்தால் இறைவன்
ஒவ்வொருமுறையும் தந்தால்(ள்) ----------?
கோடிட்ட இடத்தில் “அம்மா” வெனும்
சொல்லன்றி எச்சொல் நிற்கும்?

வலியில் தொடங்கிய
உறவாகையால் எமக்கு
வலிக்கும் போதெல்லாம்
உனையே அழைக்கிறேன்!
வலிகொடுத்து பிறந்த காரணம்
வலியெனும் வார்த்தையை-நின்
வாழ்க்கை அகராதியிலிருந்து
அழிக்க நினைக்கிறேன்!

தொப்புள்கொடி அற்று-அன்றுநீ
பின்னிய உறவே
என்றும் என் துணையாய்
எங்கும் வருகிறது!
ஏதேதோ எதிர்பார்க்கும்
ஏமாற்று உறவுகளிடையே
எம்மகிழவை நோக்கியே
உம்விழிகள் இருக்கிறது!

கருவறையில் காத்த
என் தெய்வமே
உனக்கு – என்
மனவறையில் இருக்கும்
இதயத்தை கருவறையாக்குகிறேன்!
நான் இறக்கும்வரையல்ல
இனியிருக்கும் பல பிறவிகளுக்கும்……………...

எழுதியவர் : சி.வேல்முருகன் (13-Jan-14, 4:47 pm)
சேர்த்தது : velmurugan tamil
பார்வை : 117

மேலே