தங்கக்காசு

இரவு சுமார் பதினொன்றரை மணி இருக்கும். பேருந்து சிதம்பரத்திலிருந்து சென்னையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சுமார் பத்து பயணிகள் இருந்தனர். அவர்களுடன் நடத்துனரும் சேர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.

பேருந்து புவனகிரியை தாண்டிச் சென்று கொண்டிருந்தது. பயணிகளில் ஐவர் எழுந்தனர். மறைத்து வைத்திருந்த கத்தியையும் துப்பாக்கியையும் வெளியே எடுத்தனர். ஒருவன் ஓட்டுநரின் முதுகில் கத்தியை வைத்து அழுத்தினான். அவர் மிரண்டு போனார்.

"ஐயா, என்னை ஒன்றும் செய்துவிடாதே... நீ சொன்னபடி எல்லாம் கேட்கிறேன். என்னை உயிரோடு விட்டு விடு சாமி," என்றார். பயணிகளும், நடத்துனரும் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தார்.

ஒருவன் நடத்துனரின் நெஞ்சுக்கு நேராக துப்பாக்கியைத் தூக்கிப் பிடித்தான்.

"சத்தம் போட்டால் தொலைத்து விடுவேன். ஜாக்கிரதை!" மெல்லிய குரலில் சொன்னான்.

நடத்துனர் நிலைமையை நன்றாக அறிந்தார். ஓட்டுனரைப் பார்த்தார். அவர் முதுகில் கத்தி பாய தயாராய் இருந்தது.

"சாமி எனக்கு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். நீ என்ன சொல்கிறாயோ அதைச் செய்ய நான் தயார். என்னை விட்டு விடப்பா!" பயணிகள் விழித்து விடக்கூடாதல்லவா அதனால் அவர் மிக மெதுவாகச் சொன்னார். அவர்கள் யாரும் விழித்துக் கொள்ளவில்லை. நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தனர். நடத்துனர் தன் கையிலிருந்த பணப்பையையும் திருடனிடம் ஒப்படைத்தார்.

"ஏ! எல்லாரும் இரண்டு கையையும் மேலே தூக்குங்க... கையில கழுத்தில இருக்கிற நகைகளை எல்லாம் கழற்றி பக்கத்தில் வைங்க. சத்தம் போட்டா சுட்டுப் பொசுக்கிடுவேன்," உரத்த சத்தமாய்க் கத்தினான் திருடன்.

பேருந்தில் இருந்த ஒரு சிறுவன் உள்பட அனைவரும் கண்ணைக் கசக்கிக் கொண்டு விழித்தனர். எதிரில் திருடன்; அவன் கையில் துப்பாக்கி. வலது கை ஆட்காட்டி விரல் துப்பாக்கி விசையை அழுத்த தயாராய் இருந்தது. இக்கட்டான நிலையை அறிந்து கொண்ட இரு பெண்கள் உட்பட அனைத்துப் பயணிகளும் தங்கள் தங்கச் சங்கிலிகள், வளையல்கள், மோதிரங்கள் அனைத்தையும் கழற்றிப் பக்கத்தில் வைத்தனர்.

திருடன் துப்பாக்கியை நீட்டியபடி வந்து எல்லா தங்க நகைகளைகளையும் எடுத்துத் தன் பையில் வைத்தான். பின்னர் ஐவரும் பேருந்தை நிறுத்தி இறங்கத் தயாராயினர்.

"ஐயா, என்னிடம் ஒரு தங்கக்காசு இருக்கிறது. அதையும் பெற்றுக் கொள்ளுங்கள்," என்றான் சிறுவன். இதைக் கேட்ட ஐந்து திருடர்களும் அதிசயித்து நின்றனர்.

"ஐயா, இன்று நான் தனியாகப் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். என் தாயாரும் தந்தையும் ஊரில் இருக்கின்றனர். எப்போதும் நீ உண்மையே பேச வேண்டும் என்று என் தாய் அடிக்கடி கூறுவார். நான் எப்போதும் உண்மையே பேசுவேன். நான் பர்ஸ்ட் ரேங்க் வாங்கியதால் எனக்கு இந்த தங்க டாலரைப் பரிசாகத் தந்துள்ளனர். இதன் மதிப்பு ஆயிரம் ரூபாய். நான் இதை உங்களிடம் தருகிறேன் ஏற்றுக் கொள்ளுங்கள்," என்றான் அவன்.

"தம்பி நீ உண்மை பேசும் உத்தமன் என்பதை நீரூபித்துவிட்டாய். உன்னை எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை. அந்த தங்க டாலர் எங்களுக்கு வேண்டாம். நீயே வைத்துக் கொள்," என்றான் ஒரு திருடன்.

"ஐயா! நீங்கள் அப்படிச் சொல்லவேண்டாம். இந்தப் பயணிகள் அனைவரும் உண்மையாகவே தங்களிடம் இருந்த எல்லா தங்க நகைகளையும் தந்துவிட்டனர். நான் மட்டும் தராமல் இருந்தால் எப்படி? தயவு செய்து பெற்றுக் கொள்ளுங்கள்," என்றான்.

அச்சிறுவனின் பேச்சு அந்த ஐந்து திருடர்களின் மனதை பாதித்தது. அவர்கள் மனம் மாறினர். கொள்ளையடித்த எல்லாப் பொருட்களையும் அவரவரிடம் ஒப்படைத்தனர். நடத்துனர் தன் பணப்பையை பெற்றுக் கொண்டார்.

உண்மையை பேசி தங்கள் உடமைகளை மீட்டுத் தந்த அந்தச் சிறுவனை அனைவரும் பாராட்டினர்.

எழுதியவர் : கணேஷ் கா (15-Jan-14, 10:10 am)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 80

சிறந்த கட்டுரைகள்

மேலே