அவள் வருவாளா

பூக்கள் சிரித்திடும் தோட்டம் ஒன்றில்
புன்னகை உதிர்த்திடும் பூத் தென்றல்

பெண் அவள் தேவதை மண் பிறப்போ
இல்லை தெய்வத்தின் சொந்தக் கை படைப்போ

செந்தேன் சிந்தும் இதழ் இரு தேனடையோ
அதை காத்திடும் வண்டென கூர் விழியோ

அக இருள் புறம் தள்ளி கூந்தல் பற்ற
அறிவின் சுடர் ஒளி விழியில் மின்ன

சில் லென காற்றில் கூந்தல் ஆடும்
இரவுக்கு இருளையே கொடை வார்க்கும்

மென்பொருள் கண்டது கணினி யுகம்
இப் பெண்ணெனும் மென்பொருள் புதிய முகம்

புவியழகு தேகம் கொண்ட பெண்ணுருவம்
புதுப் பூவென மலர்ந்தது அவள் பருவம்

புதுப்புனல் நீரையே புனிதம் செய்வாள்
அளவிலா அன்பினால் வையம் வெல்வாள்

பொன்னொளி மேனியில் பனித்துளி வியர்வைகள்
அத் துளிகளாய் பூத்திட என்னுள் ஆசைகள்

மாணிக்கப் பரல் சிந்தும் மேகலையோ
பெண்ணுரு போர்த்திய புதுக் கலையோ

கோமேதகம் பூத்திடும் கொடி இடையாள்
அன்பெனும் ஆலயம் நெஞ்சுடையாள்

வெண்முத்து சேர்த்திட்ட மணி மகுடம்
சிந்தும் சிரிப்பிலே நிறையும் வெற்று குடம்

வானில் வில் வர மழை வேண்டும்
இவ்வானவில் துணை வர மனம் வேண்டும்

எழுதியவர் : சண்முகானந்தம் (15-Jan-14, 1:55 pm)
பார்வை : 204

மேலே