தைப்பூசம் மேன்மை

தைப்பூசம் (Thai Poosam)

தைப்பூச நன்னாள் சிவசக்தி ஐக்கியத்தையும் மேம்பாட்டையும் விளக்கும் புனிதமான ஒரு பெருநாளாகும். தைமாதம் உத்தராயண காலத்தில் ஆரம்பம். உத்தராயணம் என்பது தேவர்களின் பகல் பொழுது என்பதால் தை மாதம் அவர்களின் காலைப் பொழுதாகும். சிவாம்சமான சூரியன் மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடகராசியில் (பூசநட்சத்திரம்) ஆட்சி பெற்றிருக்க சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் நிற்றல் தைப்பூசத்துடனிணைந்த பௌர்ணமியில் நிகழும்.

உலச்சிருஷ்டி ஆரம்பமானது இத்தினத்திலேதான். ஆண்டவன் முதலில் ஜலத்தையே படைத்தார். அதிலிருந்து பிரமாண்டம் உருவானது. இதனை நினைவூட்ட ஆலயங்களில் இத்தினத்தில் தெப்போற்சவம் நடைபெறுவதுண்டு.

சிவசக்தி ஐக்கியமான முருகப்பெருமான் மாட்சிமை பெறும் தினமாகவும் இது அமைகிறது. முருகன் ஆலயங்களில் அபிஷேகம், திருவிழா முதலியன நிகழ்த்ப்படுகின்றன. முருகனை வேண்டிப் பலர் இந்நாளில் விரதமிருப்பர்.

வாயுபகவானும், வருணதேவனும், அக்கினிதேவனும் ஒரு சமயம் தமது வலிமையைப்பற்றிப் பெருமை பேசித் தம்முள் போட்டி போட்டனர். அப்போது, அவர்களருகில் ஒரு சிறு துறும்பு காணப்படவே, வாயுபகவான் அசைக்க முயன்று தோற்றார். அக்னி தேவன் எரிக்கமுயன்று தோற்றார். வருணபகவான் அதனை நனைக்க முயன்று தோற்றார். மூவரும் இதுகண்டு திகைத்து அவைவற்று நின்றனர். அப்போது நாரதமுனவர் அங்கு தோன்றி எல்லோருக்கும் மேலான பரம்பொருட்சக்தியைப் பற்றி எடுத்துரைத்து அவர்களது கர்வத்தை அடைத்தார். தைப்பூச நன்னாளில் அவர்களது அருட்சக்தி அதிகரிக்க அருள்செய்வதாக ஆண்டவன் அருள்புரிந்தார்.

பதஞ்சலி, வியாக்கிரிபாதர் முதலானோர் தரிசிக்கச் சிவபெருமான் ஆனந்ததாண்டவமாடியதும் தைப்பூசநாளிலேதான். இப்புனித நாளில் யாவரும் அசௌகரியம் நீங்கி ஆரோக்கியமும் ஆற்றலும் பெறுவர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற வாக்கியத்திற்கிணங்கத் தை பிறந்த சிலநாட்களில் இத்தினம் தோன்றிப் புத்துணர்ச்சியூட்டி மணவாழவில் மகிழ்ச்சியையும் சகல மங்கலங்களையும் ஊட்டுகிறது.

பெண்கள் மூக்குக்குத்துதல் மற்றும் நற்காரியங்களை ஆரம்பித்தல், திருமணத்திற்கு பெண் பார்த்தல் முதலியவற்றுக்கு இத்தினத்தை தேர்ந்தெடுப்பர்.

தைப்பூசநாள் விரதக்கட்டுபாடுகள் குறைந்த ஆனால் வழிபாடு, திருவிழா, காவடி இவற்றோடு கூடிய இனிய ஒரு கொண்டாட்டமாக மலர்கிறது

எழுதியவர் : முரளிதரன் (17-Jan-14, 10:58 am)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 166

மேலே