அறிந்தும் அறியாமலும்
அறிந்தும் அறியாமலும்
என் படுக்கையறைப்பக்கமாயிருக்கின்ற
உன் திறந்த ஜன்னல் சொல்லுகிறது
உன் கோபங்களுக்குள்ளே என்னையும்
ஒளிய வைத்திருக்கின்றாயென்பதை
என் பார்வைக்கடக்கின்ற உன் அறைக்கதவை
நீ ஆயிரம் முறை சாத்தியறைந்தபொழுதும்
================================
மூன்றாம் பிறையினுள்ளே
ஒரு முழுப்பிறை
உந்தன் முகம்
அலைத் தழுவிடாத கரையொன்று
உலர்வதைப்போல்
ஆண்கள் வெட்கப்படுகின்ற தருணம்
இப்படித்தான் இருக்கின்றது போல்
உன் முறுவல்கள் தொட்டுச் சென்ற
என் வதனங்களுக்குள்ளே
சிறு இலை முளைக்கின்ற நிகழ்வுகளின்போது
=================================
உன் வருகையினாலே
மௌனம் என்கின்ற
என் ஊமைத்தனங்களுக்கெல்லாம்
மொழிப் பெயர்ந்துச் செல்லுகின்றாய்
என் பிறப்பையொரு பிரதியெடுத்து
உன் கைகளிலே
கொடுத்துவிட துணிகின்ற
என் பைத்தியக்காரத்தனங்கள்
அவளுருவஞ்செதுக்கப்பட்ட சோப்புக்கட்டியொன்றை
தேய்ந்துவிடாமல் பாதுகாக்கின்ற
என் குளியலறை வாசலிலின்றெல்லாம்
எத்தனையெத்தனையோ
என் கரைந்த சமயங்களின் ஆகாசவாணிகள்
=================================
வாழ்க்கைத் துவர்க்கின்ற சிலநேரங்களை
என் காதுகளிலே நான்
பஞ்சடைத்தவண்ணமே இரசிக்கின்றேன்
இங்கே மட்டும்தான்
உன் விகாரங்களும்
வெட்கங்களாக தெரிகின்றது
==============================
தவறிச் செய்தவென் தவறுகளினால்
நீ பேசாமல் நகருகின்ற குறைகளும்
பெரிதாக என்னில் புலப்படவில்லை
காற்றலையினால் மரங்களசைகின்ற
பேசாத நிலாப் பொழுதொன்றை
அழகாக நேசிக்கக் கற்றுக் கொண்டதனாலே
அனுசரன்